https://republictn.com/

அதிமுக, பாஜகவில் இருந்து நிர்வாகிகள் தவெக நோக்கிப் படையெடுப்பது, வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடர், மற்றும் 4 தொகுதி இடைத்தேர்தல் சூழல் எனப் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் இதயா கூறுகையில், ”ஜூன் 18ஆம் தேதி முதல் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இந்தத் தொடர் சாதாரணமாக இருக்காது, மாறாகப் பெரும் சூடுபிடிக்கும். தற்பொழுது தவெக அல்லது பிற கட்சிகளுக்கு மாறத் திட்டமிட்டு, ஆனால் இன்னும் முறைப்படி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யாத சில அதிமுக உறுப்பினர்கள், சட்டமன்றத்திற்குள்ளேயே இபிஎஸ்-க்கு எதிராகப் பேசிவிட்டுப் பிறகு ராஜினாமா செய்யக்கூடும் என்ற பரபரப்புத் தகவல் உலவுகிறது.

இதற்காகவே சில அதிமுக எம்.எல்.ஏக்களுக்குப் பின்னணியில் இருந்து சில ‘அசைன்மென்ட்டுகள்’ கொடுக்கப்பட்டு, அவர்கள் தற்காலிகமாகத் தேக்கி வைக்கப்பட்டுள்ளனர். கொடநாடு வழக்கு விவகாரங்களை எழுப்பியும் அவையில் சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மதுராந்தகம் போன்ற இடங்களில் தவெக நடத்திய பிரம்மாண்ட இணைப்புக் கூட்டங்களில் அதிமுகவினர் பெருமளவில் இணைந்து வருகின்றனர். “இனிமேல் அதிமுக அவ்வளவுதான், எதிர்காலம் இல்லை” என்ற விரக்தியில்தான் நிர்வாகிகள் மாறுகிறார்கள்.

அரசியலுக்கு வருபவர்கள் வெறும் ஓட்டுப் போடும் தொண்டர்களாக இல்லாமல், கவுன்சிலர், பகுதிச் செயலாளர், எம்.எல்.ஏ என அதிகாரப் பதவிகளை நோக்கியே வருகிறார்கள். தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்கும் ஒரு கட்சியில் இருந்தால் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று முடிவு செய்து, புதிய சக்தியான தவெக-வில் அதிர்ஷ்டம் அடிக்கிறதா என்று பார்க்கப் புறப்பட்டுவிட்டனர்.

பாஜாகவிலும் அண்ணாமலையின் தன்னிச்சையான போக்கு, அக்கட்சியின் பலவீனம் காரணமாக, விஜயதாரணி போன்ற பல முக்கியக் முகங்கள் தவெக நோக்கி நகர்கின்றனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், அதைத் தள்ளிப்போடவோ, அல்லது ரத்து செய்யக் கோரியோ அதிமுக தற்பொழுது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
தங்களுக்குச் செல்வாக்கான அந்தத் தொகுதிகளிலேயே மீண்டும் வெல்ல முடியுமா? என்ற பயம் அதிமுகவிற்கு வந்துவிட்டது. ஒருவேளை இடைத்தேர்தல் நடந்து, ஆளுங்கட்சி பலத்துடன் தவெக அந்தத் தொகுதிகளைக் கைப்பற்றினால், அதிமுக முற்றிலும் பலவீனப்பட்டுப் போகும் என்பதால் தேர்தலை தள்ளிப்போட நினைக்கிறார்கள்.

மறுபுறம், ஆளுங்கட்சியான தவெக-விற்கும் தற்போதுள்ள ‘விஜய் கிரேஸ்’ அப்படியே நீடித்தால் ஐந்து தொகுதிகளையும் அவர்கள் வென்றுவிடுவார்கள் என்ற அச்சம் திமுகவிற்கும் உள்ளது. எனவே, தேர்தல் தள்ளிப்போய் அரசு, விஜய் மீதான பாப்புலாரிட்டி கொஞ்சம் குறையட்டும் என்றே இரு கழகங்களும் விரும்புகின்றன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தினால் அது விஜய்க்குப் பெரும் சவாலாக மாறும். ஒரு எம்.எல்.ஏ அல்லது அமைச்சர் செய்யும் ஊழல் நேரடியாகப் பொதுமக்களைப் பாதிப்பதில்லை. ஆனால், சாக்கடை அடைப்பு, தெருவிளக்கு, வீட்டு வரி, பிறப்பு/இறப்புச் சான்றிதழ் என எல்லாவற்றிற்கும் லஞ்சம் கேட்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளால்தான் ஒரு கட்சிக்கு நேரடியாகக் கெட்ட பெயர் ஏற்படும்.

தவெக-வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களமிறங்கி, அவர்கள் மீது லஞ்சப் புகார்களோ அல்லது தற்பொழுது சேலத்தில் தவெக பிரமுகர் மீது எழுந்துள்ள பாலியல் வன்கொடுமை வீடியோ சர்ச்சைகள் போன்ற குற்றச்சாட்டுகளோ எழுந்தால், அது விஜய்யின் பெயரைக் கெடுத்துவிடும்.

தவெக அரசு லஞ்சத்தை ஒழிக்கப் டாஸ்மாக் பெட்டி கமிஷனை ரத்து செய்து அதை அரசு கஜானாவிற்கு மாற்றியதும், ஆன்லைன் பத்திரப்பதிவைக் கட்டாயமாக்கியதும் நல்ல திட்டங்கள் என்றாலும், நேரடியாகப் பொதுமக்களுக்குப் பாட்டிலுக்கு ₹10 குறைப்பது போன்ற சலுகைகள் கிடைக்காதவரை மக்கள் திருப்தியடைய மாட்டார்கள்.

ஆர்.டி.ஓ அலுவலகங்கள், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் போன்ற வருவாய்த்துறைச் சான்றிதழ்களை பொதுமக்கள் நேரடியாக அதிகாரிகளைச் சந்திக்கத் தேவையில்லாத முழுமையான ஆன்லைன் முறையைக் கொண்டு வர வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, அறுவைச் சிகிச்சை போன்றவற்றுக்கு இஷ்டம்போலக் கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து, அரசு ஒரு உச்சவரம்பு விலையை நிர்ணயிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago