https://republictn.com/

சிவகங்கை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பனுக்கு எதிராக, அதே மாவட்டத்தைச் சேர்ந்த பசியாபுரம் திமுக கிளைச் செயலாளர் ராஜமூர்த்தி வெளியிட்டுள்ள முகநூல் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கூட்டுறவுத் துறை வேலைவாய்ப்பில் நடந்த முறைகேடுகள், தேர்தல் நிதிப் பங்கீட்டில் காட்டப்பட்ட பாரபட்சம், உள்ளூர் நிர்வாகிகளின் கையாடல் எனப் பல விவகாரங்களை அம்பலப்படுத்தியுள்ள அவர், தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். அவரது பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அவரது பதிவில், ”சிவகங்கை மாவட்ட செயலர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களுக்கு வணக்கம்! சுருக்கமாக உங்களிடம் சில கேள்விகள்! கடந்த நமது ஆட்சியில் நீங்கள் கூட்டுறவு துறை அமைச்சராக இருந்தபோது, கூட்டுறவு ஆபிசர்ஸ் வேலைக்கு விளம்பரப்படுத்தி எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தி, ஆட்கள் சேர்க்கப்பட்டனர். அந்த தேர்வில் எனது மனைவிக்கு (D.Coop ப்ளஸ் டிகிரி) எலிஜிபிள் இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டது!

இத்தனைக்கும் தங்களிடம் நேரடியாக பார்த்து குடும்ப சூழலையும் கூறி, இவ்வாய்ப்புடன் என் மனைவிக்கு ஏஜ் ஃபாராகி விடும் என்றும் தங்களிடம் கூறினேன்! இது சம்பந்தமாக மேலும் இருமுறை தங்களிடம் முறையிட்டிருந்தேன். நீங்கள் மனது வைத்திருந்தால் அசால்ட்டாக வாய்ப்பை என் மனவிக்கு ஏற்படுத்தி தந்திருக்க முடியும். எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? நான் ஏழை என்பதாலா? பாவம், இவனால் 14 இலட்சம் செலுத்த முடியாது என முன்கூட்டியே முடிவு செய்து விட்டீர்களா?!

பணம்தான் வேலையை தரும், இந்த இயக்கத்திற்காக உழைப்பு வேலையை தராது என அறிந்திருந்தால் என் கிட்னியை விற்றாவது பணத்தை தந்திருப்பேனே? இனி யாரை சொல்லி என்ன பிரயோஜனம்! அப்போது நீங்கள் நியமித்த கூட்டுறவு அதிகாரிகள் D.Coop. (diploma in co operative training) படித்தவர்களை யாரும் நியமித்திருக்கிறீர்களா? சொல்ல முடியுமா உங்களால்?!

எலிஜிபிள் இருந்தும், வாய்ப்பு மறுக்கப்பட்டதை எதிர்த்து, அப்போதே கோர்ட்டுக்கு சென்று ஸ்டே வாங்கலாமென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பிறகும், நான் உயிரென மதிக்கும் திமுக கட்சிக்கு அவப்பெயர் வேண்டாமென அமைதியாகி விட்டேன்!
என்னைப்போல எத்தனை கட்சிக்காரன், எந்தெந்த துறைகளில் பாதிக்கப்பட்டானோ? அவர்கள் அனைவரும் இப்பதிவில் கமெண்ட் செய்யுங்கள்! அப்போதாவது தலைமைக்கு தெரியட்டும்!

சரி விடுங்கள்! எலக்சன் போது நமது மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில், திருப்பத்தூருக்கு 80%, (இஸ்லாமிய பகுதிகளில் 100%) காரைக்குடிக்கு 50%, சிவகங்கைக்கு 70% மானாமதுரைக்கு 58% பட்டுவா ஏன்? இப்படி ஒதுக்கியது தலைமையா? அல்லது நீங்களா? ஏணிந்த பாரபட்சம்? சிவகங்கையில் எலக்சன் பணத்தை கையாடல் செய்தவர்கள் (ஆனந்த், ஜெயராமன் போன்ற பெயர்கள் கேள்விப்பட்டேன். ஆனால் நான் நேரடியாக பார்த்தது இல்லை. தவறான பெயர்கள் இருந்தால் மன்னிக்கவும்) மீது தலைமைக்கு புகார் அளித்தீர்களா? நடவடிக்கை எடுத்தீர்களா?

திரு. சேங்கைமாறன் அவர்களை மானாமதுரையில் வேலை பார்க்கச்சொல்லாமல் சிவகங்கை தொகுதியில் கூடுதல் நாட்கள் அனுப்பியது ஏன்? எல்லா மாவட்டங்களிலும் நடந்த குளறுபடி தலைவர் தளபதியில் வெற்றியை காவுவாங்கியது மட்டுமன்றி, ஒரு ஓட்டில் உங்கள் வெற்றியையும் காவு வாங்கி விட்டது! இதற்கு காரணகர்த்தா யார்? அவர்களுக்கு தண்டனைதான் என்ன?

தலைமை அனுப்பிய தேர்தல் தோல்விக்கான காரணத்தை அறியும் குழுவிடம், இந்த மாதிரி எல்லா உண்மைகளையும் சொல்லப்பட்டதா?
அவர்களுக்கு மேலே சொன்ன விஷயம் தெரியுமா? எப்படியோ திமுக தொண்டனின் உள்ளகுமுறலை அதிகமாக்கிய கும்பல் நிச்சயம் பதில் சொல்லியே தீர வேண்டும்!

இறுதியாக… எனது ஊரில் தவெக அதிகம் ஓட்டு வாங்கியதால் நான் பொறுப்பேற்று, இளைய தலைமுறைக்கு வழிவிட்டு எனது கிளை செயலர் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளின் தோல்விக்கு பொறுப்பேற்றும், இளைய தலைமுறைக்கு வழிவிட்டும் நீங்களும் ராஜினாமா செய்வீர்கள் என்றும் என நம்புகிறேன். மேலும், நிர்வாக வசதிக்காக சிவகங்கை மாவட்டத்தை இரண்டு மாவட்டங்களாக பிரிக்குமாறும் தலைமைக்கு கோரிக்கை வைக்கிறேன். இந்த கோரிக்கைகளும், மனக்குமுறலும், திமுகவின் தலைமையின் செவிகளில் விழுந்து, நல்முடிவுகள் அனைத்து மாவட்டத்திலும் எடுக்கப்பட்டால் இனி திமுகவின் காலம்தான்.” என மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago