திருச்சி பாலக்கரை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிறுவர்கள் உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிறுமி காணாமல் போனதாக அவரது உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, பின்னர் சிறுமியை கண்டுபிடித்தனர்.
சிறுமியை உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றபோது, அவர்களுடன் செல்ல விருப்பமில்லை என்று சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.
அங்கு சிறுமியிடம் தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், சிலர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மோகன் ராஜ், கிஷோர் உள்ளிட்டோர் மற்றும் சில சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சிறுமியை காரில் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
