தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் அரசின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் அமைச்சரவை கூட்டத்திலும் டாஸ்மாக் தொடர்பான விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகத்தை மேலும் சீரமைத்து, வருவாயை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதுவரை மதுபான விற்பனையில், காட் (Case) வகை மதுபானப் பெட்டிகளுக்கு தலா ரூ.90, பீர் பெட்டிகளுக்கு ரூ.40 மற்றும் ஒயின் பெட்டிகளுக்கு ரூ.20 என வசூலிக்கப்பட்ட தொகை அரசின் கணக்கில் வராமல், வேறு வழிகளில் வெளியேறியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்தத் தொகை அரசியல் கட்சிகளுக்கான நிதியாக பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மாதந்தோறும் சுமார் 88 லட்சம் முதல் 90 லட்சம் மதுபானப் பெட்டிகள் விற்பனையாகும் நிலையில், இதன் மூலம் மாதத்திற்கு சுமார் ரூ.100 கோடி வரை வசூலிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்தத் தொகை முழுவதும் நேரடியாக அரசின் வருவாயாக சேரும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் புதிய ஏற்பாடுகளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாற்றம் அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சீரமைப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாதத்திற்கு சராசரியாக ரூ.100 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,200 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் டாஸ்மாக் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய சீரமைப்பு நடவடிக்கைகள், அரசின் வருவாயை கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
