கோவையில் போலி டிஜிட்டல் கைது (Digital Arrest) மிரட்டலுக்கு பயந்து, 58 வயது பெண் ஒருவர் தனது கணவரின் ஓய்வூதிய பலனான ரூ.18 லட்சத்தை இழந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், மிரட்டலுக்கு அஞ்சி அவர் 18 நாட்கள் வெளி உலக தொடர்பின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த சோகமான நிகழ்வும் தெரியவந்துள்ளது.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 58 வயது பெண், முன்னாள் வங்கி அதிகாரியாக இருந்த தனது கணவர் கொரோனா காலத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனது மகளுடன் வசித்து வந்தார். பின்னர் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் கோவை வடவள்ளியில் உள்ள சொந்த வீட்டிற்கு வந்துள்ளனர்.
சில நாட்களுக்குப் பிறகு மகள் சென்னைக்கு திரும்பிய நிலையில், அந்தப் பெண் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இவரது மொபைல் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தன்னை மும்பை காவல்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு, உங்கள் வங்கி கணக்கில் இருந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு ரூ.2.5 கோடிக்கும் அதிகமான சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. எனவே நீங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என மிரட்டியுள்ளார்.
மேலும், உங்கள் வீட்டை ரகசிய போலீசார் கண்காணித்து வருகின்றனர். வெளியே சென்றாலோ அல்லது யாரிடமும் தெரிவித்தாலோ உடனடியாக கைது செய்யப்படுவீர்கள் எனவும் பயமுறுத்தியுள்ளார்.
இந்த மிரட்டலால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், 18 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், யாருடனும் தொடர்பு கொள்ளாமல் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் 18 நாட்களுக்குப் பிறகு மோசடி கும்பல் மீண்டும் தொடர்பு கொண்டு, அவரது வங்கி கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என கூறியுள்ளது. அப்போது அந்தப் பெண் தன்னிடம் சேமிப்பாக ரூ.18 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உடனே, அந்த பணத்தை அரசு தணிக்கைக்காக குறிப்பிட்ட கணக்கிற்கு மாற்ற வேண்டும். தணிக்கை முடிந்ததும் பணம் திருப்பி வழங்கப்படும் என நம்பும்படி கூறியுள்ளனர்.
இதனை நம்பிய அந்தப் பெண், இரு தவணைகளாக ரூ.18 லட்சத்தை மோசடி கும்பல் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் ஒரு வாரம் கடந்தும் பணம் திருப்பி வராததால், தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
மோசடிக்காரர்கள் பறித்துச் சென்ற அந்த ரூ.18 லட்சம், அவரது மறைந்த கணவரின் ஓய்வூதிய பலன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மோசடியில் ஈடுபட்ட நபர்களின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
