தென்னாப்பிரிக்காவில் தங்கச் சுரங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறி சிங்கப்பூரில் பொறியாளராக பணியாற்றும் ஒருவரிடம் ரூ.10 கோடி மோசடி செய்த வழக்கில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை பெரம்பலூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் கோவில்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிராஜா கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சொந்த ஊருக்கு வந்திருந்த போது, தர்மபுரியைச் சேர்ந்த சுகனேஸ்வரன் மற்றும் பிரவீண் உள்ளிட்டோருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, தென்னாப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் உள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறப்பட்டதாக கூறப்படுகிறது. இதை நம்பிய பாரதிராஜா, பல கட்டங்களாக ரூ.10 கோடி வரை முதலீடு செய்துள்ளார்.
பின்னர், லாபத் தொகை என்ற பெயரில் சுமார் ரூ.2 கோடி மட்டும் திருப்பி வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள தொகையை சுகனேஸ்வரனும் பிரவீணும் திருப்பி தராமல் ஏமாற்றியதாகவும் கூறி, அவர் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட சுகனேஸ்வரனும் பிரவீணும் தலைமறைவாக இருந்தனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் செல்வகுமாரிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ராசிபுரத்தில் இருந்த பிரவீணின் தாயார் ஜெயா மற்றும் அவரது சகோதரி வினோதினி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான சுகனேஸ்வரனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் ரொக்கம், 18 சவரன் தங்க நகைகள், வைர தோடு மற்றும் மோதிரம், சொகுசு கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விசாரணைக்குப் பிறகு ஜெயா மற்றும் வினோதினி இருவரும் பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர். சுகனேஸ்வரன் பெரம்பலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், தலைமறைவாக உள்ள பிரவீண் உள்ளிட்ட மற்ற குற்றவாளிகளை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டால் வழக்கு அடுத்த கட்டத்திற்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
