https://republictn.com/

தமிழக அரசியல் களம் தற்போது ‘ஆபரேஷன் அதிமுக’ என்கிற காய் நகர்த்தலால் பரபரத்துக் கிடக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் கண்டு, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்திருந்தாலும், நிரந்தரத் தனிப் பெரும்பான்மை என்கிற ஒற்றை இலக்கை நோக்கி முதலமைச்சர் விஜய் காய்களை நஅவுகர்த்தத் தொடங்கியுள்ளார்.

ஆட்சி அமைக்கத் தேவையான ‘மேஜிக் நம்பர்’ ஆன 118 இடங்களைத் தவெக சொந்த பலத்தில் எட்ட வேண்டும் என்பதில் கட்சித் தலைமை மிக உறுதியாக உள்ளது. இதன் முதல் கட்ட வெளிப்பாடுதான், அண்மையில் 4 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்த அதிரடி நிகழ்வு. இவர்களைத் தொடர்ந்து இன்னும் சில அதிமுக எம்.எல்.ஏ-க்களை தவெக பக்கம் இழுப்பதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள், பின்னணி வேலைகள் கோட்டை வட்டாரத்தில் படுவேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, மாவட்ட அளவில் அதிமுகவின் முக்கியப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளையும் வளைத்துப்போட தவெக தலைமை ஒரு புதிய வியூகத்தை வகுத்துள்ளது. அதன்படி, வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், மாற்றுக் கட்சியினர், முக்கியமாக அதிமுகவினர தவெக-வில் இணையும் விழாக்களைத் தீவிரமாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையிலும், அந்தந்த மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த இணைப்பு விழாக்களைப் பிரம்மாண்டமாக நடத்த மாவட்ட நிர்வாகிகளுக்குத் தலைமை உத்தரவு போட்டுள்ளது. குறிப்பாக, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஐடி ஊழியர்கள், பொதுமக்கள் அதிகளவில் சமூக வலைதளங்களைப் பார்ப்பதால், இந்த இணைப்பு விழாக்கள் மூலம் ஒரு பலமான அரசியல் அலை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து ‘பெரிய தலைகள்’, மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகள் தவெக பக்கம் வரும் பட்சத்தில், சென்னை தலைமை அலுவலகத்தில் நடக்கும் இணைப்பு விழாக்களில் முதலமைச்சர் விஜயே நேரடியாகக் கலந்துகொண்டு அவர்களைக் கட்சியில் வரவேற்பார் என்றும் தவெக உள்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தத்தில், வார இறுதி நாட்களை தவெக-வின் ‘அதிமுக அசுர வேட்டை’ நாளாக மாற்றக் கட்சித் தலைமை போட்ட ஸ்கெட்ச், மற்ற கட்சிகளைப் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago