Vijay house

சென்னை நீலாங்கரையில் தமிழக முதலமைச்சர் விஜய் இல்லத்தின் அருகே, பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை சாலையோரத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட காவல்துறை விசாரணையில், குழந்தையைக் கைவிட்டதாகக் கூறப்படும் முன்னாள் விமானப் பணிப்பெண் உள்ளிட்ட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது பிரதான சாலையில், முதலமைச்சர் விஜய் இல்லத்தின் பின்புறம் சுமார் 300 மீட்டர் தொலைவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களுக்கு, சாலையோரத்தில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து, அருகில் சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரங்களே ஆன, தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் பெண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீலாங்கரை போலீசார், குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குழந்தை மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க  நிஜ 'அமரன்' மேஜர் முகுந்திற்கு தமிழக அரசின் ஆகச்சிறந்த மரியாதை! தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு பெயர் மாற்றம்!

இதற்கிடையே, குழந்தையைச் சாலையோரத்தில் விட்டுச் சென்றவர்கள் யார் என்பதைக் கண்டறிய, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, இரண்டு பெண்கள் குழந்தையை எடுத்துவந்து சாலையோரத்தில் விட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. மேலும், குழந்தையை ஒரு சாக்குப்பையில் மறைத்து எடுத்துவந்து அப்பகுதியில் விட்டுச் சென்றதும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையைக் கைவிட்டதாகக் கூறப்படும் முக்கியப் பெண் ஆகாங்க்ஷா லால் (Akansha Lal) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் முன்னாள் விமானப் பணிப்பெண் எனத் தெரியவந்துள்ளது. கர்ப்பமாக இருந்த காரணத்தால், சில மாதங்களுக்கு முன்பே விமானப் பணிப்பெண் வேலையிலிருந்து விலகியதாகவும் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

மேலும், அந்தப் பெண்ணுக்கு உதவியாக வடமாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் உடன் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரு பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குழந்தையைக் கைவிட்டதற்கான காரணம் என்ன, அவர்களுக்கு இடையேயான தொடர்பு என்ன, குழந்தையின் தந்தை யார், குழந்தையை முதலமைச்சர் இல்லத்தின் பின்புறம் உள்ள பகுதியில் விட்டுச் செல்லத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் நீலாங்கரை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க  "ஐடி கார்டுல சாதியா? சான்ஸே இல்ல!" நெட்டிசன்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த மாஸ் ரிப்ளை!

இதற்கிடையே, குழந்தையின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலப் பராமரிப்பு தொடர்பாக குழந்தை நலக் குழுமத்திற்கும் (Child Welfare Committee – CWC) முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு, சட்டப்படியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில், தொப்புள்கொடி கூட அகற்றப்படாமல் சாலையோரத்தில் கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தையைக் கைவிட்டதன் பின்னணி குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *