Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Duraimurugan

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமண விழாவில் வேத மந்திரங்கள் முழங்கப்பட்ட விவகாரம், தற்போது விவாதங்களை கிளப்பியுள்ளது.

கி. வீரமணியின் கடும் அறிக்கை
துரைமுருகன் பேத்தி, எம்.பி. கதிர் ஆனந்த் மகள் செந்தாமரை திருமண விழாவில் பிராமணர்களைக் கொண்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டதை எதிர்த்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நவம்பர் 3-ஆம் தேதி நீண்ட கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

“ஒரு குடம் பாலாக இருந்தாலும், ஒரு துளி ஆரிய விஷம் பட்டால் பாலின் வெண்மை பேசப்படுமா?” என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் தனது வேதனையையும் வெட்கத்தையும் பதிவு செய்துள்ளார். 45 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் இருக்கும் துரைமுருகனின் பொதுவாழ்க்கைக்கு இது ஒரு தீராத களங்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைமையும் இயக்கமும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகளை இனி தொடராதவண்ணம் எச்சரிக்கையுடன் தடுத்து நிறுத்த வேண்டும் என வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

துரைமுருகன்- கதிர் ஆனந்த் விளக்கம்
இந்த சர்ச்சை குறித்து துரைமுருகன் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் தராவிட்டாலும், கதிர் ஆனந்த் வட்டாரங்களில் விசாரித்தபோது, ”பாலாற்றங்கரை வழக்கப்படி திருமணம் என்பது மாப்பிள்ளை வீட்டாரால் நடத்தப்படுவது வழக்கம். அதனால்தான் பெண் வீட்டார் சார்பில் நிச்சயதார்த்த விழா ஏற்கனவே வேலூரில் மிக பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்தத் திருமணம் மாப்பிள்ளையின் தந்தையும், திரைப்பட தயாரிப்பாளருமான கண்ணன் ரவியின் ஏற்பாட்டில், அவருடைய ஆன்மீக நம்பிக்கையின்படி நடைபெற்றது.

இதையும் படியுங்க  அடிச்சு சொல்றாங்க, அடுத்த பிரதமர் விஜய்..! ரகசியமாக சந்திக்கும் வட மாநில எம்.பி.,க்கள்..! சபாநாயகர் ஓம் பிர்லா சர்ப்ரைஸ் உத்தரவு..!
Duraimurugan

எம்.பி. கதிர் ஆனந்த் தீவிர ஆன்மீக பக்தி கொண்டவர். நெற்றி நிறைய பொட்டுடன் தான் எப்போதுமே காட்சி அளிப்பார். வீட்டை விட்டுப் புறப்படும் போது அவரது தாயார் பொட்டு வைத்துதான் அனுப்புவார். இது துரைமுருகனின் குடும்பத்தில் நடக்கும் மூன்றாம் தலைமுறை கல்யாணம் என்பதால், இதில் நடக்கும் சடங்குகளுக்கு அவர் நேரடியாகப் பொறுப்பாக முடியாது” என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அறிவாலயம் கொடுத்த கிரீன் சிக்னல்
இந்த விவகாரத்தில் துரைமுருகன் தரப்பிற்கு ஒரு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. கி. வீரமணியின் இந்த அறிக்கை அவராக வெளியிட்டதா? அல்லது அறிவாலயத்தின் ஒப்புதல் பெற்ற பின் வெளியிடப்பட்டதா? என்ற விவாதம் கிளம்பியுள்ளது. இதற்குப் பின்னால் சில அரசியல் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. துரைமுருகன் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றபோதே, அந்தப் பதவிக்குரிய முக்கிய அதிகாரங்கள் கட்சியின் சட்டவிதிகளின்படி தலைவர் பதவிக்கு மாற்றப்பட்டன. இது அப்போதே அவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

2021-26 ஆட்சிக்காலத்தில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகனுக்கும், முதலமைச்சருக்கும் இடையே இலாக்காக்கள், சில நிர்வாக ரீதியான விஷயங்களில் அவ்வப்போது ஊடல்கள் ஏற்பட்டு வருவது திமுக மேலிடம் அறிந்ததுதான்.

இதையும் படியுங்க  "திமுக கோட்டைகளில் அடுத்தடுத்து வீசும் புயல்!  எம்.பி. சி.என்.அண்ணாதுரை இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை!"

கடந்த சில மாதங்களாகவே, திமுக பொதுச்செயலாளர் பதவியில் துரைமுருகனுக்குப் பதிலாக மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படக்கூடிய ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் கட்சிக்குள் ஒலித்து வருகின்றன. எனவே, இந்தத் திருமணச் சர்ச்சையைப் பயன்படுத்தி துரைமுருகனைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைக்க ஏதேனும் உட்கட்சி அழுத்தங்கள் கொடுக்கப்படுகிறதா? என்ற விவாதங்கள் திமுக வட்டாரத்தில் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago