நாடாளுமன்றத்தில் பல நிலைக்குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கள ஆய்வுகளின்போது தாங்கள் சேகரித்த விபரங்கள், கோரிக்கைகள் மற்றும் குறைகளை, நாடாளுமன்ற செயலக அதிகாரிகள் உதவியுடன், எம்.பி.,க்கள் முழுமையாக தொகுத்து, அறிக்கையாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வர்.
இந்த நிலைக்குழு தலைவர்களுக்கு, சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை அளித்துள்ளார். ”மாநிலங்களுக்கு செல்லும்போது, சம்பந்தப்பட்ட முதல்வர்களை சந்தித்து மாநில வளர்ச்சி, தேவைகள் என பல விஷயங்களை விவாதியுங்கள். அப்போது தான் மாநிலத்திற்கு என்ன தேவை என்பது தெரிய வரும். அதை வைத்து நாடாளுமன்றத்தில் பேசலாம். தமிழகம் செல்வோர், முதல்வர் விஜயை கண்டிப்பாக சந்திக்க வேண்டும். ஏனென்றால், கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டில் ஆட்சியைப் பிடித்தவர். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளார்.

இதையடுத்து, நிலைக்குழுவில் உள்ள மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா எம்.பி.,க்கள், முதல்வர் விஜயை சந்திக்க ஆவலாக உள்ளனர். ஒரு சில நிலைக்குழு எம்.பி.,க்கள் முதல்வரை சந்தித்து விட்டனராம். விஜய் குறித்த வீடியோக்களை வட மாநிலங்களில் பலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை அடுத்து, இப்போது வட மாநிலங்களில் பிரபலமாக இருப்பவர், முதல்வர் விஜய் தான். ‘இதனால் தான், அடுத்த பிரதமர் விஜய்’ என, த.வெ.க.,வினர் கூறி வருகின்றனர்.
‘துப்பாக்கி’, ‘மெர்சல்’, ‘மாஸ்டர்’, ‘லியோ’ போன்ற விஜய்யின் திரைப்படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூப் மற்றும் இந்தி தொலைக்காட்சி அலைவரிசைகளில் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன. சமீபத்திய திரைப்படங்கள் வடஇந்திய திரையரங்குகளிலும் நேரடியாக வெளியாகி, அவருக்குப் பெரிய அளவிலான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கின.
விஜய்யின் மாஸ் வசனங்கள், நடன அசைவுகள், அரசியல் பேச்சுகளின் ரீல்ஸ்கள் வடஇந்திய சமூக வலைதளப் பயனர்களிடையே வைரலாகி வருகின்றன. வடமாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு இன்ஃப்ளூயன்ஸர்கள், நெட்டிசன்கள் விஜய்யின் அரசியல் நகர்வுகளையும், அவரது மாநாடுகளையும் பற்றி இந்தியில் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தென்னிந்திய அரசியலில் புதிய அலை ஏற்படுத்திய விஜய்யை, தேசிய அளவிலான இளம் அரசியல் தலைவர்களில் ஒருவராக வடமாநில இளைஞர்கள் பலரும் உற்றுநோக்குகின்றனர். அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட சில கருத்துக்கணிப்புகள், தேசிய ஊடக விவாதங்களில் விஜய்யின் பெயர் இடம்பெறத் தொடங்கியுள்ளது.
