Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Chennai

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே மாயமான மூன்று அரசுப் பள்ளி மாணவிகள், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போலீஸாரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். பெற்றோர் கண்டித்ததால் மனவேதனை அடைந்து வீட்டை விட்டு வெளியேறிய மாணவிகள், சென்னையில் மெரினா கடற்கரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்ப விருப்பமின்றி பேருந்து நிலையத்தில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் – ஜோதி தம்பதியினரின் மகள் மகாலட்சுமி, பத்தாம் வகுப்பும், அவரது தங்கை மகேஸ்வரி, ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களது உறவினரான நித்யா, எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மூன்று மாணவிகளும் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

மகாலட்சுமி, மகேஸ்வரி ஆகியோரின் பெற்றோர் கேரளாவில் கூலி வேலை செய்து வருவதால், இருவரும் தண்டராம்பட்டு பஜனைக் கோவில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கிப் படித்து வந்தனர். நித்யா, தனது 65 வயது பாட்டி உண்ணாமுலையின் அரவணைப்பில் தரடாப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தார்.

இதையும் படியுங்க  இடி மின்னலுடன் கனமழை வெளுத்துப் வாங்கப்போகுது.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட்!

இந்நிலையில், மகாலட்சுமி மற்றும் மகேஸ்வரி ஆகிய இருவரும் கடந்த சில வாரங்களாகச் சரியாகப் பள்ளிக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த கேரளாவில் இருந்த அவர்களது தாய் ஜோதி, தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் எனக் கண்டித்துத் திட்டியுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த மூன்று மாணவிகளும், கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் பள்ளிச் சீருடையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தண்டராம்பட்டிலிருந்து திருவண்ணாமலைக்குச் சென்ற அவர்கள், அங்கிருந்து சென்னையில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்குச் சென்றுள்ளனர்.

மூன்று மாணவிகளுக்கும் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அக்டோபர் 27-ஆம் தேதி மெரினா கடற்கரைக்குச் சென்று சுற்றிப் பார்த்துள்ளனர். பின்னர், சொந்த ஊருக்குத் திரும்ப விருப்பமில்லாததால், கள்ளக்குறிச்சியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டதாகத் தெரிகிறது.

இதற்காக மீண்டும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வந்த மூன்று மாணவிகளும், அங்கேயே இரவு தங்கியுள்ளனர்.

இதையும் படியுங்க  "ஒரே இரவில் கொட்டிய 30 செ.மீ மழை.. ஆக்ஷனில் இறங்கிய அரசு! சென்னை மழையின் தற்போதைய கள நிலவரம்!"

இதற்கிடையே, மாணவிகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர்களது பாட்டி மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்திலும் தெரிந்தவர்களின் வீடுகளிலும் தேடியுள்ளனர். எங்கும் கிடைக்காததால், தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாணவிகளைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராகுல் வி. கோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மாணவிகளின் புகைப்படங்கள் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு இடங்களில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்கள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், அக்டோபர் 28-ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தங்கியிருந்த மூன்று மாணவிகளையும் அங்கிருந்த போலீஸார் அடையாளம் கண்டனர். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கிளாம்பாக்கம் சென்ற தனிப்படை போலீஸார் மூன்று மாணவிகளையும் பத்திரமாக மீட்டனர். பின்னர், அவர்களைத் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அழைத்துச் சென்று, அதிகாலை சுமார் 6.30 மணியளவில் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த பாட்டி உண்ணாமுலையிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படியுங்க  "800 பக்க குற்றப்பத்திரிகை ரத்து! நடுரோட்டில் கவினின் பெற்றோர் கண்ணீர் போராட்டம்: நீதிமன்றம் சொன்ன அந்த 'ஒரு' காரணம் என்ன?

மீட்கப்பட்ட மாணவிகளுக்கு போலீஸார் தேவையான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

பெற்றோர் கவனத்திற்கு: குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்குச் சூழல் உருவாகாமல் இருக்க, பெற்றோர் அவர்களைக் கண்டித்துத் தண்டிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், மனம்விட்டுப் பேசி அவர்களின் பிரச்சினைகளையும் மனநிலையையும் புரிந்துகொள்வது அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago