மேடையில் ஒழுக்கம்… மதுக்கோப்பையில் ஆட்டம்! “மக்களுக்காக அரசியல்… இளைஞர்களுக்காக ஒழுக்கமான அரசியல்!” இது தமிழக வெற்றிக் கழகம் மேடைதோறும் முழங்கும் வசனம். ஆனால் திருப்பத்தூரில் அந்த வசனத்தை முழங்க வேண்டியவர்களே, இப்போது ‘மதுக் கோப்பை’யை உயர்த்தும் வீடியோக்களில் சிக்கி, மக்கள் முகம் சுழிக்க வைத்திருக்கிறார்கள்!
ஒன்று இல்லை… அடுத்தடுத்து இரண்டு வீடியோக்கள். இரண்டிலும் சிக்கியிருப்பதாகக் கூறப்படுவது மாவட்ட, ஒன்றிய அளவிலான முக்கிய நிர்வாகிகள். இதனால் திருப்பத்தூர் அரசியல் வட்டாரம் இப்போது அனல் பறக்கிறது.

முதல் ஆட்டம்: மாவட்ட செயலாளர் – திருப்பத்தூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் நவீன் குமார் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு வீடியோதான் முதல் குண்டு.
அலுவலகம் போன்ற ஒரு அறை. மேஜை மீது வரிசை கட்டி நிற்கின்றன மதுபாட்டில்கள். பின்னணியில் சினிமா பாட்டு அலறுகிறது. வெள்ளைச் சட்டை அணிந்த ஒருவர், கையில் மதுக்கோப்பையை ‘சியர்ஸ்’ சொல்லி உயர்த்த, சுற்றி இருப்பவர்கள் ஆரவாரம் செய்கிறார்கள்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இது கட்சி அலுவலகமா… இல்லை பார்ட்டி ஹாலா?” என்று கிண்டலடிக்கத் தொடங்கிவிட்டனர். “கொள்கை முழக்கம் பகலில்… கோப்பை முழக்கம் இரவில் போல!” என நக்கல் அடித்து வருகின்றனர்
இரண்டாவது ஆட்டம்: ஒன்றியச் செயலாளர் (?)

முதல் புயல் ஓய்வதற்குள் அடுத்த புயல். இந்த முறை ஆலங்காயம் வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.எழில் தொடர்புடையதாகக் கூறப்படும் வீடியோ.
எழில் மதுபாட்டிலில் இருந்து நேரடியாக, தண்ணீர் கூட கலக்காமல் ‘ரா’வாக அருந்துவது போன்ற காட்சி இடம்பெறுவதாக சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதைப் பார்த்த திமுக இனைய பிரமுகர்கள் “அடேங்கப்பா… இவர்கள் கொள்கையில் மட்டுமல்ல, குடிப்பதிலும் ‘ரா’வாக இருக்கிறார்களே!” என்று கலாய்த்து வருகின்றனர்.
கொள்கை ஒன்று… கோப்பை வேறா? – இங்குதான் தவெக-வுக்கு சிக்கல். இளைஞர்களைக் கவர ‘ஒழுக்கமான மாற்று அரசியல்’ என்று பேசிவிட்டு, நிர்வாகிகளே இப்படி வீடியோக்களில் சிக்குவதாகக் கூறப்பட்டால், தொண்டர்கள் என்ன நினைப்பார்கள்?
“மேடையில் தண்ணீர் பாட்டில்… மறைவில் மதுபாட்டில்!” என்று எதிர்க்கட்சிக்காரர்கள் இதைக் கையில் எடுத்துவிட்டார்கள். இனி தவெக மேடை ஏறும்போதெல்லாம், “முதல்ல உங்க கோப்பையைக் கீழே வையுங்க… அப்புறம் கொள்கை பேசுங்க!” என்று கூச்சல் வரும் அபாயம் இருக்கிறது.
ஒரு வீடியோவை வைத்து ஒருவரைக் குற்றவாளி என்று முடிவு செய்ய முடியாது. தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்கும் வித்தியாசம் உண்டு. ஆனால், கட்சிப் பொறுப்பில் இருப்பவர், அதுவும் கட்சி அலுவலகம் என்று கூறப்படும் இடத்தில் இப்படி ஒரு காட்சி வெளியானால், பதில் சொல்ல வேண்டியது தலைமையின் கடமை அல்லவா?
தலைமை ஏன் மௌனம்? – இரண்டு வீடியோக்கள் வைரலாகியும் தவெக தலைமை இதுவரை வாய் திறக்கவில்லை இந்த மௌனம் பல சந்தேகங்களைக் கிளப்புகிறது.
அதேவேளையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நவீன்குமார் ஆட்டம் போட்ட வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது, ஒன்றிய செயலாளர் பி எழில் மது அருந்தும் வீடியோவை திமுக ஐடி இனையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்
தலைமை உடனடியாகச் செய்ய வேண்டியது மூன்றே விஷயம்தான்:
1. வீடியோ உண்மையா, போலியா என்று விசாரிக்க வேண்டும். 2. சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்க வேண்டும். 3. உண்மை என்றால் கட்சி விதிப்படி நடவடிக்கை; பொய் என்றால் அவர்களின் பெயரைக் காப்பாற்ற அதிகாரப்பூர்வ மறுப்பு.
இதைச் செய்யாமல் ‘கப்சிப்’ என்று இருந்தால், “தவெக-வில் தவறு செய்தால் தட்டிக் கேட்க ஆள் இல்லை” என்ற பிம்பம்தான் உருவாகும்.
“இந்த வீடியோ குறித்து நவீன்குமாரிடம் விளக்கம் கேட்டதற்கு” … அது ரொம்ப பழைய வீடியோங்க ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்க போறாங்க எனக்கு எதிராக இருப்பவர்கள் மாவட்ட செயலாளர் பதவியை பெற செய்யும் சதி அது என்றவரிடம் , ஆலங்காயம் வடக்கு ஓன்றிய செயலாளர் மது அருந்திய வீடியோ குறித்து கேட்டதற்கு பொதுச் செயலாளரிடம் கலந்து பேசிட்டு முடிவு செய்வோம் என்றார்
திருப்பத்தூர் தவெக-வுக்கு இது வெறும் சர்ச்சை அல்ல… சோதனை! கோப்பையைத் தூக்கியவர்கள் யார் என்பதை விட, கொள்கையைத் தூக்கிப் பிடிக்க தலைமை என்ன செய்யப் போகிறது என்பதே இப்போது முக்கியமான கேள்வி!
