புதுச்சேரியே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு திரும்பினாலும் ‘கருப்பு’ திரைப்படத்தின் போஸ்டர்கள், தோரணங்கள் என சூர்யா ரசிகர்கள் காமராஜர் சாலையைத் திணறடித்துக் கொண்டிருந்தனர். இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா – த்ரிஷா கூட்டணியில் உருவான இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, ஆர்.ஜே. பாலாஜி முதல்முறையாக வில்லனாக அவதாரம் எடுத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆவலைத் தூண்டியிருந்தது.
திருவிழாவாக மாறிய திரையரங்கம்
புதுச்சேரி ஜீவா ருக்மணி திரையரங்கில் அதிகாலை முதலே சூர்யா ரசிகர்கள் குவியத் தொடங்கினர். சூர்யாவின் பிரம்மாண்ட பேனருக்கு பாலாபிஷேகம், பட்டாசு வெடிப்பு, டிஜே இசையில் அதிரடி நடனம் என அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. யோகி பாபு, இந்திரன்ஸ், நட்டி நடராஜ் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படத்தின் முதல் காட்சியைக் காண ரசிகர்கள் தவம் கிடந்தனர்.
இடியாய் இறங்கிய அறிவிப்பு
ஆட்டம் பாட்டம் என உச்சக்கட்ட உற்சாகத்தில் இருந்த ரசிகர்களின் தலையில் பேரிடியாய் விழுந்தது அந்த அறிவிப்பு. “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது” என திரையரங்கு நிர்வாகம் திடீரென அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், திரையரங்கு வாசலில் ஒன்று திரண்டு நிர்வாகத்திற்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

போர்க்களமாக மாறிய சாலை
காத்திருந்த ஏமாற்றம் ஆத்திரமாக மாற, ரசிகர்கள் காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திரையரங்கு முன்பதிவு செய்த டிக்கெட் தொகையைத் திருப்பி அளித்தாலும், “எங்கள் கொண்டாட்டத்தை சீர்குலைத்துவிட்டீர்கள்” என ரசிகர்கள் கொந்தளித்தனர். போலீசாரின் தலையீட்டிற்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தாலும், புதுச்சேரி சூர்யா ரசிகர்களுக்கு ‘கருப்பு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி, நிஜமாகவே ஒரு கருப்பு தினமாக மாறிப்போனது பெரும் சோகமே.
-பி.சக்திவேல், சிறப்பு நிருபர், புதுச்சேரி
