சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சின்னக்காவூர் கிராமத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கிருந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த செல்லம் என்ற மூதாட்டியை சந்தித்துப் பேசிய நெகிழ்ச்சியான நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேட்டூர் அணை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் திடீரென சின்னக்காவூர் கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்குச் சென்று இன்ப அதிர்ச்சி அளித்தார். முதலமைச்சரைக் கண்டதும் ஆனந்தக் கண்ணீர் வடித்த செல்லம் பாட்டி, அவரது கைகளைப் பிடித்து அன்புடன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பின்னர், முதலமைச்சரின் கன்னங்களைத் தழுவி திருஷ்டியும் கழித்தார்.
மூதாட்டி தன் மீது காட்டிய அன்பால் நெகிழ்ந்த முதலமைச்சர் விஜய், தான் அணிந்திருந்த கூலிங் கிளாஸை கழற்றி அவருக்குப் பரிசாக வழங்கினார். மேலும், அந்தக் கண்ணாடியை செல்லம் பாட்டியின் முகத்தில் அவரே மாட்டிவிட்டு, மகிழ்ச்சியுடன் அவரைப் பார்த்தார்.
முதலமைச்சர் சார்பில் செல்லம் பாட்டி மற்றும் அங்கிருந்த விவசாயக் குடும்பத்தினருக்கு பட்டுப்புடவைகள் மற்றும் உடைகளும் பரிசாக வழங்கப்பட்டன. விவசாயப் பணிகள் குறித்து அவர்களிடம் முதலமைச்சர் விஜய் கேட்டறிந்ததுடன், அங்கு கூடியிருந்த பொதுமக்களின் கோரிக்கைகளையும் இன்முகத்துடன் கேட்டறிந்தார்.
முதலமைச்சர் விஜய் தங்களைச் சந்தித்தபோது, எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் இயல்பாகப் பழகிய விதம் கிராம மக்களை வெகுவாகக் கவர்ந்ததாகக் கூறப்படுகிறது. பனை மரங்கள் சூழ்ந்த ஒற்றையடிப் பாதைகளிலும், பச்சைப் பசேலென காட்சியளித்த விவசாய நிலங்களிலும் அவர் சாதாரணமாக நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த உள்ளூர் விவசாயிகளின் தோளில் கைகளைப் போட்டுக்கொண்டு அவர்களுடன் சகஜமாகப் பேசிக்கொண்டே சென்றார்.
விவசாயி பி. ராமசாமியின் நிலத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு என்னென்ன பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன, தற்போதைய விளைச்சல் நிலவரம் எப்படி உள்ளது, விவசாயிகளுக்குத் தேவையான உதவிகள் என்னென்ன என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
முதலமைச்சர் தனக்குக் கண்ணாடி மாட்டிவிட்ட பிறகு ஊடகங்களிடம் பேசிய செல்லம் பாட்டி, “அவர் என் கையைப் பிடிச்சுக்கிட்டே என் வீட்டுக்குள்ள வந்தார். நான் உணர்ச்சிவசப்பட்டதைப் பார்த்துட்டு, ‘பாட்டி அழாதீங்க’ என்று சொல்லி, அவரே அவருடைய கண்ணாடியைக் கழட்டி எனக்கு மாட்டிவிட்டார். இந்தக் கண்ணாடியை நான் சாகுற வரைக்கும் பத்திரமாக வைத்திருப்பேன். யாருக்கும் தரமாட்டேன்” என்று பேரன்புடன் கூறினார்.

காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பாசனத் தேவைகளுக்காக மேட்டூர் அணையின் மதகுகளை முதலமைச்சர் விஜய் முறைப்படி திறந்து வைத்தார். அணையிலிருந்து புதிய நீர் சீறிப்பாய்ந்து வந்தபோது, முதலமைச்சர் விஜய் மலர் தூவி நீரை வரவேற்றார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மேட்டூர் அணைக்கு அவர் மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ வருகை இதுவாகும்.
மேட்டூர் அணை திறப்பு மற்றும் முதலமைச்சரின் சின்னக்காவூர் கிராமப் பயணத்தை முன்னிட்டு, மேட்டூர் மற்றும் மேச்சேரி பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்களும், தொண்டர்களும் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சரைக் காண ஏராளமான பெண்களும் பொதுமக்களும் சாலையோரங்களில் காத்திருந்தனர்.
சின்னக்காவூர் கிராம நிகழ்வுகளை முடித்துக்கொண்டு முதலமைச்சர் விஜய் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டார். செல்லும் வழியிலும் சாலையோரங்களில் ஏராளமான மூதாட்டிகளும் பொதுமக்களும் அவரைக் காண காத்திருந்தனர். இதைக் கவனித்த முதலமைச்சர், உடனடியாக தனது காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார். பின்னர் அங்கிருந்த மூதாட்டிகளின் கைகளைப் பிடித்து அவர்களிடம் நலம் விசாரித்தார்.
அணை திறப்பு நிகழ்வைத் தொடர்ந்து, மேட்டூர் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கும் முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். மேலும், நீர்வளத்துறை சார்பில் மேட்டூர் அணையின் வரலாறு மற்றும் அதன் கட்டமைப்பு குறித்து அமைக்கப்பட்டிருந்த சிறப்புப் புகைப்படக் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

முதலமைச்சரின் மேட்டூர் வருகையை முன்னிட்டு சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதே நேரத்தில், மேட்டூர், மேச்சேரி மற்றும் சின்னக்காவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
எளிய மக்களுடன் முதலமைச்சர் விஜய் காட்டிய இந்தக் கனிவான அணுகுமுறையும், செல்லம் பாட்டியுடன் அவர் பேசிய நெகிழ்ச்சியான தருணங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, செல்லம் பாட்டியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவர் வீட்டிற்குள் சென்ற காட்சிகளும், தனது கூலிங் கிளாஸை அவருக்குப் பரிசளித்த காட்சிகளும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
விவசாய நிலங்களுக்குள் நேரடியாகச் சென்று, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, அவர்களுடன் இயல்பாக உரையாடியதுடன், எளிய குடும்பத்தினருக்குப் பட்டுப்புடவைகள் மற்றும் வேஷ்டிகளைப் பரிசளித்த முதலமைச்சர் விஜய்யின் இந்தத் திடீர் கிராமப் பயணம் தற்போது தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பேசப்படும் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.
