பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற REBOOT 2026 பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் 100 இசைக்கலைஞர்களுடன் இணைந்து நேரடி இசை நிகழ்ச்சியை வழங்கி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் (Rajalakshmi Engineering College – REC) நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு ஆரவாரம் செய்தனர்.
மேடையில் ஒரே நேரத்தில் 100 திறமையான இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து ஒத்திசைவுடன் இசைக்கருவிகளை வாசித்தனர். ஜி.வி. பிரகாஷ் தனது திரைப்பயணத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்கள் மற்றும் இசையை நேரலையாக வழங்கி, மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில், ஜி.வி. பிரகாஷுடன் பிரபல நடிகர் சூரியும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும், மேடையில் இடம்பெற்ற 100 இசைக்கலைஞர்களில், பாங்காக்கைச் சேர்ந்த Studio28 Bangkok Symphonic Orchestra குழுவினரும், சென்னையைச் சேர்ந்த Staccato இசைக்குழுவினரும் இணைந்து சிம்பொனி இசையை உருவாக்கினர். இவர்களுடன் Unison இசைக்குழுவினரும் இணைந்து தங்களது இசைத் திறமையை வெளிப்படுத்தினர்.
இவர்களுடன் தென்னிந்தியாவின் முன்னணி வெஸ்டர்ன் காயர் குழுக்களில் ஒன்றான EL FÉ Choir குழுவினரும் இணைந்தனர். அவர்களின் பின்னணிக் குரல்களுடன் ஆர்கெஸ்ட்ரா இசையும் இணைந்ததால், நிகழ்ச்சிக்கு மேலும் பிரம்மாண்டமான இசை அனுபவம் கிடைத்தது.
இந்த REBOOT 2026 நிகழ்ச்சி வெறும் பொது இசை நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்துள்ள முதலாண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் கல்லூரி நிர்வாகத்தால் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு இசை விழாவாக நடைபெற்றது.
ஜி.வி. பிரகாஷ் சர்வதேச சிம்பொனி இசைக்கலைஞர்களுடன் இணைந்து மேடையேற உள்ளதாக அறிவிப்பு வெளியானதுமே, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. குறிப்பாக, அவரது பிரபல இசைப் படைப்புகளில் ஒன்றான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை 100 பேர் கொண்ட இசைக்குழுவுடன் நேரலையில் கேட்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துகளைப் பதிவிட்டனர்.
நிகழ்ச்சியின் போது ஜி.வி. பிரகாஷ் மற்றும் நடிகர் சூரி இருவரும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்னிலையில் எடுத்துக்கொண்ட மாஸ் செல்ஃபி மற்றும் ரீல்ஸ் வீடியோக்களும் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

100 இசைக்கலைஞர்களுடன் இணைந்து நிகழ்த்திய இந்தப் பிரம்மாண்ட சிம்பொனி முயற்சி குறித்து பேசிய ஜி.வி. பிரகாஷ், இந்தத் தரத்திலான இசைத் தயாரிப்பு நிச்சயமாக தேசிய அளவில் பேசப்படும் என்றும், இதுபோன்ற இசை முயற்சிகள் மேலும் பலரிடம் கொண்டு செல்லப்படும் என்றும் பெருமையுடன் தெரிவித்தார்.
மேலும், நிகழ்ச்சியில் திரண்டிருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் உற்சாகத்தையும் ஆரவாரத்தையும் பார்த்து வியந்த ஜி.வி. பிரகாஷ், ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்களின் எனர்ஜி மற்றும் வைப்ஸ் தன்னை மிகவும் கவர்ந்ததாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில், “உங்களோடு ஒரு மெமரி வேணும்” எனக் கூறிய ஜி.வி. பிரகாஷ், ஒட்டுமொத்த மாணவர் கூட்டத்தையும் பின்னணியில் நிறுத்தி மேடையில் செல்ஃபி மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டார். இந்தக் காட்சியும் மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
100 இசைக்கலைஞர்கள், சர்வதேச சிம்பொனி இசைக்குழுக்கள், முன்னணி காயர் குழு மற்றும் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களின் உற்சாகம் என, REBOOT 2026 இசை நிகழ்ச்சி ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமான இசை அனுபவமாக அமைந்துள்ளது.
