சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 12-வது நாளை எட்டியுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நடிகை சனம் ஷெட்டி, முதலமைச்சர் விஜய் உடனடியாக தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டும் இதே இடத்தில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தில் பங்கேற்றதாகக் கூறிய சனம் ஷெட்டி, ஆட்சி மாறிவிட்டது என்பதற்காக அவர்களின் பிரச்சனைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தனது மனசாட்சிக்கு எதிரானது என்றார்.
கடந்த ஆட்சியில் தொடங்கிய பிரச்சனைக்கு இன்றுவரை தீர்வு கிடைக்காதது மிகவும் வருத்தமளிப்பதாகவும், தான் ஊரில் இல்லாததால் முன்கூட்டியே வர முடியவில்லை என்றும், நேற்றுதான் ஊருக்கு வந்த நிலையில் இன்று போராட்டக் களத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தாம் இருப்பதாகவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகவும் வாக்குறுதி அளித்திருந்ததை சனம் ஷெட்டி நினைவுகூர்ந்தார்.
தற்போது அதே தூய்மைப் பணியாளர்கள் முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் எனக் கோரிக்கை வைப்பது மிகவும் நியாயமானது என்றும், முதலமைச்சர் விஜய் வந்து தனது மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சனைகளைக் கேட்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசுத் தரப்பில் அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சனம் ஷெட்டி தெரிவித்தார். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகவும், சட்டப்பேரவையிலும் இந்தப் பிரச்சனை குறித்து பேசப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதேநேரத்தில், அதிகாரப்பூர்வ அறிக்கை அல்லது உறுதியான அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டத்தைத் தொடர்வோம் எனப் பணியாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தூய்மைப் பணியாளர்களின் உரிமைக்காகப் போராடுவது அவர்களது உரிமை என்றும், அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும் சனம் ஷெட்டி கூறினார். வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு, ஊதிய உயர்வு, பிற சலுகைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளையில், பணி நிரந்தரம் என்பது நிர்வாக ரீதியாக மட்டுமின்றி சட்டரீதியாகவும் நிதி ரீதியாகவும் பரிசீலிக்க வேண்டிய விவகாரம் என அவர் கூறினார். சுமார் 30 ஆண்டுகளாகத் தொடரும் தனியார்மயமாக்கல் தொடர்பான பிரச்சனையை உடனடியாகத் தீர்ப்பது எளிதான காரியம் அல்ல என்றும், ரூ.5,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்கள் தொடர்புடைய நிலையில் அவற்றை உடனடியாக ரத்து செய்வது சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக கடந்த ஆண்டு வழக்கறிஞர் பாரதி தொடர்ந்த வழக்கிலும் நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியின் 7, 4 மற்றும் 8-வது மண்டலங்களில் பணியாற்றிய சுமார் 1,400 தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு உள்ளதாகவும் சனம் ஷெட்டி கூறினார்.
பட்டியலில் விடுபட்ட 13 பேரையும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பணிகளில் சேர்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். எனினும், குறிப்பிட்ட மூன்று மண்டலங்களுக்கு மட்டும் இல்லாமல், அனைத்து தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கை என்றார்.
பணி நிரந்தரம் என்பது ஒரே நாளில் நிறைவேற்றக்கூடிய கோரிக்கை அல்ல என்றும், அரசு இதைச் செய்ய மாட்டோம் எனக் கூறவில்லை; அதற்கான கால அவகாசம் தேவை என்றுதான் கூறி வருவதாகவும் சனம் ஷெட்டி தெரிவித்தார். எனவே, பணி நிரந்தரம் தொடர்பாக அரசுக்கு நியாயமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அதேநேரத்தில் மற்ற நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தினமும் போராட்டத்தில் பங்கேற்பதால் அதிகம் பாதிக்கப்படுவது தூய்மைப் பணியாளர்கள்தான் என்றும் அவர் கூறினார். அதிகாலையிலேயே எழுந்து வியர்வை சிந்தி வேலை செய்துவிட்டு மீண்டும் போராட்டத்திற்கு வருவது அவர்களுக்கு சிரமமாக இருக்கும் என்பதால், பணி நிரந்தரம் தொடர்பான விவகாரத்தில் மட்டும் சற்று கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியில் இருப்பவர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தால், அதை நிறைவேற்றக் கோருவது தூய்மைப் பணியாளர்களின் நியாயமான உரிமை என்றும் சனம் ஷெட்டி தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் மற்ற சந்திப்புகளை ஒதுக்கிவைத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், பணி நிரந்தரத்துக்கு கால அவகாசம் தேவைப்பட்டாலும், முடிந்தவரை விரைவாக நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
