Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மீதான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி ஆணையிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி
தமிழகத்தில் குட்கா பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி. ரமணா, சென்னை முன்னாள் மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் முன்னாள் டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உட்பட 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், சி. விஜயபாஸ்கர் தனது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக கட்சியில் இணைந்த நிலையில், இவ்வழக்கில் இந்த முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜின் மனு
இந்த வழக்கில் 278 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வழக்கில் விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் அளிக்காத சிலரை சாட்சிப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அனைத்து சாட்சிகளின் வாக்குமூல நகல்களையும் தனக்கு வழங்க வேண்டும் என்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், சிறப்பு நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதையும் படியுங்க  பல்ஸ் பார்த்தாச்சு..! தவெக-வேண்டாம்.! சுயேச்சையாக கெத்து காட்டப்போகும் விஜயபாஸ்கர்..!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜார்ஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன், பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதால், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் எந்தத் தவறும் இல்லை எனக் கூறி ஜார்ஜின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதே சமயம், இந்த குட்கா முறைகேடு வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, கீழமை நீதிமன்றமான எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 12 வார காலத்திற்குள் இந்த விசாரணையை முழுமையாக முடித்து உத்தரவிட வேண்டும் என அதிரடி காலக்கெடு விதித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago