Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து பொதுக்கூட்டத்தில் அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஜூலை 3, 2026 அன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சில மணி நேரங்களிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாக, அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், “ஒரு எம்.எல்.ஏவாக இருக்கும் ஒருவர் ஏன் இப்படிப் பேச வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியதுடன், அவரது முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தார்.

முன்ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை, நீதிமன்ற உத்தரவு வெளியான ஒன்றரை மணி நேரத்திற்குள் போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இதையும் படியுங்க  தலைகீழாக நடக்கப்போகும் மாற்றம்..! முதல்வர் விஜய்யின் மாஸ் வியூகம்..! இனி அதிமுக- திமுக அவ்வளவுதானா..?

போலீஸார் தன்னை நெருங்கியதும், “என் வழக்கறிஞர் வரட்டும், பேசிக் கொள்ளலாம்” என்று அவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்பின்னர், போலீஸாரிடம் பேசிக்கொண்டே தனது சொந்தக் காரில் ஏறி அமர்ந்த அவர், “நீங்கள் முன்னால் செல்லுங்கள்; நான் பின்னால் வருகிறேன்” என்று கூறி அங்கிருந்து செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

ஆனால், நிலைமையை உணர்ந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர், அவரை சொந்தக் காரில் செல்ல அனுமதிக்க மறுத்து, காரிலிருந்து இறக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அனிதா ராதாகிருஷ்ணன் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டதும், அங்கு திரண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் வாகனத்தை முன்னோக்கிச் செல்லவிடாமல் மறியலில் ஈடுபட்டு, தவெக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

பின்னர், மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்களை போலீஸார் கலைத்து, அனிதா ராதாகிருஷ்ணனை பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து, அவரிடம் போலீஸார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர்.

இதையும் படியுங்க  விஜய்க்கு அரசியல் தெரியாதா..?! அதிமுக 'அவுட்'… அடுத்து திமுக ஸ்கெட்ச்..! அறிவாலத்தை அலறவிடும் 'பவர் பாலிடிக்ஸ்'..!

விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன், “என்னை திமுகவிலிருந்து விலகி, ஆளும் தவெக கட்சியில் இணையுமாறு போலீஸார் கடுமையாக வற்புறுத்தினர். அதற்கு நான் மறுத்ததால்தான் பழிவாங்கும் நோக்கில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று குற்றம்சாட்டினார்.

இந்தக் கைதைத் தொடர்ந்து, திமுக தலைவர்கள் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

“தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டத் தவறும் இந்த ரீல்ஸ் அரசு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏவை கைது செய்வதில் மட்டும் அராஜக வேகத்தைக் காட்டுகிறது” என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago