Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

கணவன் ஜெயிலுக்குப் போனதால் தனிமையில் தவித்த சிவகாமி, புது காதலனோடு வாழ்க்கையைத் தொடங்கக் காத்திருந்தவர். தன் குழந்தைகள் இடையூறாக இருப்பதால், குழந்தைகளை கிணற்றில் தள்ளி மூச்சுத் திணறடித்து கொடூரமாகக் கொலை செய்து கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை நடுநடுங்க வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் கொலைகள், கொள்ளைகள் போன்றவற்றுடன் கள்ளக்காதல் விவகாரங்களும், அதற்காக நடைபெறும் கொலைகளும் இப்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதிலும், “காஞ்சிபுரம் அபிராமி” போல பெற்ற குழந்தைகளை கல்நெஞ்சோடு கொல்லும் கொடூரத் தாய்மார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம். ஆலங்காயம் அடுத்த பெத்தூர் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி, 15 மற்றும் 9 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக ஆலங்காயம் போலீசாருக்குத் தகவல் பறந்தது.

Republic Tamil

இதனையடுத்து, சிறுவர்களின் உடல்களை மீட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து, இது கொலையா? அல்லது விபத்தா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 10 நாட்களுக்குப் பிறகு திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூரைச் சேர்ந்த சிவகாமி என்பவரைக் கைது செய்திருக்கிறார்கள் ஆலங்காயம் போலீசார்.

சிவகாமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “திருவண்ணாமலை மாவட்டம்” ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமரத்தூர் அடுத்த வெளிச்சானூர் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் சேட்டு – சிவகாமி தம்பதியினர். இவர்களுக்கு பிரேம்குமார், பிரதாப் என்ற ஆண் குழந்தைகள் இருந்தனர்.

இதையும் படியுங்க  “75 வயது தந்தையின் கொடூர வெறியாட்டம்! சொத்து தகராறில் அரிவாளுடன் தாக்குதல்”

இந்நிலையில், கடந்த ஆண்டு சேட்டு ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டிய வழக்கில் கைதாகி, 6 மாதங்களாக அங்கு சிறையில் இருந்து வருகிறார். இதனால், தனிமையில் இருந்து வந்த சிவகாமிக்கு அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால் கர்ப்பம் தரித்திருக்கிறார்.

Republic Tamil

ஒரு கட்டத்தில், இவர்களது கள்ளக்காதலுக்கு சிவகாமியின் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக எண்ணி, இருவரையும் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியவர்கள். அதன்படி, சிவகாமி தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்திற்கு வந்துள்ளார். அதன்பிறகு, குழந்தைகளுக்கு பிஸ்கட், டீ வாங்கி ஊட்டிவிட்டு, பெத்தூரில் இருக்கும் ஓய்வுபெற்ற விஏஓ பிரகாசத்தின் விவசாய நிலத்தில் இருக்கும் கிணற்றுப் பகுதிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று, தூக்கி வீசி கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆலங்காயம் போலீசாரிடம் விசாரித்தோம்… ராஜாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட சிவகாமிக்கு தன் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக உணர்ந்துள்ளார். அதனால், மலைக்கு கீழ் உள்ள திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதிக்கு கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வந்து, யாரும் செல்ல முடியாத இடத்தில் உள்ள கிணற்றில் குழந்தைகளைத் தூக்கி வீசி, அவர்கள் மூழ்கிச் சாகும் வரை பார்த்துவிட்டு, அங்கிருந்து காதலன் ராஜாவோடு மீண்டும் ஜமுனாமரத்தூருக்குச் சென்றிருக்கிறார். இந்த வழக்கில் திருப்பத்தூர் போலீசார் தீவிரமாகத் தேடுவதை அறிந்துகொண்டு, தன் தாய் வீட்டிற்கு சிவகாமியை ராஜா அனுப்பி வைத்துவிட்டார். குழந்தைகள் இல்லாமல் சென்றதால், உறவினர்கள், “குழந்தைகள் எங்கே?” எனக் கேட்டதற்கு சரியான பதில் அளிக்காததால் சந்தேகமடைந்தவர்கள், ஊர் நாட்டாமை மூலம் ஜமுனாமரத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகளைக் கொன்றதை சிவகாமி ஒப்புக்கொண்டார். பின்னர், அவரை ஆலங்காயம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்

இதையும் படியுங்க  “மதுரை நள்ளிரவு அதிர்ச்சி: கோவில் அருகே சிறுவன் கொடூரமாக வெட்டி கொலை!”
Republic Tamil

அதனைத் தொடர்ந்து, சிவகாமி மற்றும் கள்ளக்காதலன் ராஜாவை ஆலங்காயம் காவல்துறையினர் கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கடந்த வாரம் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இதேபோன்று ஒரு கொலை நடந்துள்ளது. அதில் குழந்தைகளுக்குப் பதில், மனைவி தன் கள்ளக்காதலன் துணையோடு தன் கணவனையே கொலை செய்தார். 2023 – பூந்தமல்லியில் கள்ளக்காதலனுடன் சேருவதற்காகத் தனது 3 வயது பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்துவிட்டு, குழந்தை தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய தாயும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர். 2024 – கிருஷ்ணகிரியில் கள்ள உறவுக்குத் தடையாக இருந்த 2 வயதுக் குழந்தையைத் தாயும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்துக் கொன்று, சடலத்தை ஏரியில் வீசிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இத்தகைய குற்றங்களுக்கான முக்கிய காரணங்கள் குறித்து “உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமதி ஷெனாஸ்” அவர்களிடம் பேசினோம்… சுயநலம் மற்றும் கண்மூடித்தனமான ஈர்ப்பினால் தங்களின் ஒழுக்கத்தையும், பெற்ற பாசத்தையும் மறந்து, தற்காலிக இன்பத்திற்காக முடிவெடுப்பது, புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கோ அல்லது தங்களின் கள்ளத்தொடர்பு வெளியே தெரிந்துவிடுவதற்கோ குழந்தைகள் தடையாக இருப்பதாக நினைப்பது, சமூக மற்றும் குடும்பக் கட்டுப்பாடுகளை மீறும்போது ஏற்படும் தீவிரமான சுயநலப் போக்கு, சட்டத்தின் மீதான பயமில்லாமல் இதுபோன்று செய்யத் தூண்டுகிறது. இத்தகைய பாதகச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி பிரிவு 302) ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வரை மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. “காஞ்சிபுரம் – அபிராமிக்கு” சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது போன்று, “திருவண்ணாமலை – சிவகாமிக்கும்” மிகக் கடும் தண்டனை கிடைக்கும் என்றார்.

இதையும் படியுங்க  "சென்னை 2015 வெள்ளம் மீண்டும் வருமா? என்ன செய்யப் போகிறது தமிழக அரசு? எல் நினோ அதிர்ச்சித் தகவல்கள்!"
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago