Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

salaman pappaiah

தமிழ்ப் பட்டிமன்றத்தின் நிகரற்ற அடையாளம் சாத்தூர் சாலமன் பாப்பையா. தமிழர்களின் பண்டிகைக் காலங்களிலும், தொலைக்காட்சித் திரைகளிலும் தனக்கேயுரிய எளிய, நகைச்சுவையான தமிழால் பல தசாப்தங்களாக மக்களைக் கட்டிப்போட்ட தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா, தனது 90-வது வயதில் காலமானார்.

மதுரை மண்ணில் பிறந்து, உலகம் முழுதும் வாழும் தமிழர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த அந்த மாமனிதரின் வாழ்வும், அவரோடு இணைந்த இனிமையான நினைவலைகளும் என்றென்றும் போற்றத்தக்கவை. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தில் 1936-ஆம் ஆண்டு பிறந்தார் பாப்பையா. எளிய குடும்பச் சூழலில், பஞ்சாலை தொழிலாளியின் மகனாக வளர்ந்த அவரது இயற்பெயர் ‘சுந்தரம் பாப்பையா’. பின்னாளில் கிறித்துவ சமயத்தைத் தழுவியபோது ‘சாலமன் பாப்பையா’ ஆனார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலையும், தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்ற அவர், தான் படித்த மதுரை அமெரிக்கன் கல்லூரியிலேயே தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். வகுப்பறைகளில் அவர் மாணவர்களுக்குச் சொன்ன பாடம், வெறும் புத்தகப் பாடம் மட்டுமல்ல; தமிழின் சுவையையும் வாழ்வின் நெறிகளையும்தான். அதுவரை மேடைகளில் மேல்தட்டு மக்களுக்கான கடினமான இலக்கியப் பேச்சாக மட்டுமே இருந்த பட்டிமன்றக் கலையை, பாமர மக்களும் ரசிக்கும்படி எளிமைப்படுத்திய பெருமை இவரையே சேரும்.

இதையும் படியுங்க  "70 லட்சம் இளைஞர்களின் கனவில் மண்? TNPSC குரூப் 2 அறிவிப்பால் கொதித்தெழும் தமிழகம்!"

90-களின் தொடக்கத்தில் தொலைக்காட்சி யுகம் மலர்ந்தபோது, சன் தொலைக்காட்சி மூலம் பண்டிகை நாட்களின் அங்கம் ஆனார். தீபாவளி, பொங்கல் என்றால் வீடுகளில் சாலமன் பாப்பையாவின் “வணக்கம்…!” என்ற கம்பீரமான குரல் ஒலிக்காமல் விடியாது. ராஜா, பாரதி பாஸ்கர் போன்ற சிறந்த பேச்சாளர்களை வைத்துக்கொண்டு, நடுவராக அவர் செய்யும் நையாண்டிகளும், நுட்பமான தீர்ப்புகளும் பட்டிமன்றங்களுக்குப் புது இரத்த ஓட்டத்தைக் பாய்ச்சின. குடும்ப உறவுகள், கணவன்-மனைவி விவாதம், சமூக மாற்றங்கள் என அன்றாட மனிதர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளையே பட்டிமன்றத்தின் தலைப்புகளாக மாற்றிச் சிந்திக்க வைத்தார்.

வெறும் மேடைப் பேச்சாளராக மட்டுமின்றி, ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்ட எழுத்தாளராகவும் இவர் மிளிர்ந்தார். சாதாரண மனிதனும் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் இவர் எழுதிய ‘திருக்குறள் உரை’ லட்சக்கணக்கான வீடுகளைச் சென்றடைந்தது. புறநானூறு மற்றும் அகநானூறு பாடல்களுக்குப் புதிய வரிசை அமைப்பில் எளிய உரைகளை எழுதியுள்ளார். தினமும் காலையில் தொலைக்காட்சியில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியங்களுக்கும் நயம்பட உரை கூறி இலக்கிய நவையை எளிய மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

இதையும் படியுங்க  இல்லம் தேடிக் கல்வி: நிறுத்தாதே… தொடரு! தன்னார்வலர்களின் அதிரடி முழக்கம்!

தனது எதேச்சையான பேச்சால் திரை உலகையும் விட்டுவைக்கவில்லை. இயக்குநர் சங்கரின் ‘பாய்ஸ்’ மற்றும் ரஜினிகாந்தின் ‘சிவாஜி: தி பாஸ்’ போன்ற படங்களின் மூலம் திரை ரசிகர்களையும் கவர்ந்தார். ‘சிவாஜி’ படத்தில் ரஜினியுடன் அவர் செய்யும் நகைச்சுவைக் காட்சிகள் என்றும் அடியாத நினைவுகள். தமிழுக்கு இவர் ஆற்றிய நிகரற்ற சேவையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது (2000). இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருது (2021). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ் பேரறிஞர் விருது (2010). சாலமன் பாப்பையா என்ற ஆளுமை மறைந்திருக்கலாம், ஆனால் அவர் மேடைகளில் விதைத்த நகைச்சுவையும், தமிழைப் பாமரனுக்கும் கொண்டு சேர்த்த அந்த எளிய சிரிப்பும், தமிழர்களின் நினைவலைகளில் என்றுமே நிலைத்திருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago