மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள வடக்கு ஆவணி மூல வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் மற்றும் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு மே 24ஆம் தேதி நள்ளிரவில் வடக்குமாசி பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்ற சிறுவன், பைக்கில் வந்த கும்பல் ஒன்றால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த விளக்குத்தூண் காவல் துறையினர் விரைந்து வந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது சிறுவன் குபேந்திரன் தனது நண்பர்களுடன் சென்றபோது ஏற்பட்ட தகராறில் முத்துமணி என்பவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட முன்விரோதமே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, 24ஆம் தேதி இரவு குபேந்திரன் மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் வளாகத்தின் மேல்மாடிக்கு தனது நண்பருடன் சென்றிருந்த போது, இரண்டு பைக்குகளில் வந்த முத்துமணி, அவரது தம்பி ராஜ், சதீஷ்குமார், ஹரிகிருஷ்ணன், முத்துக்குமார் உள்ளிட்டோர் கொண்ட கும்பல் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. சிறுவன் தப்பி ஓட முயன்றபோதும், அவர்கள் விரட்டி சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் முத்துமணி, அவரது தம்பி ராஜ் உள்ளிட்ட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தனது மகனை இழந்த தாயார் தாமரைச்செல்வி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள மாநகராட்சி கார் பார்க்கிங் மற்றும் வணிக வளாகப் பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தங்குதல், மது அருந்துதல், போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே அந்தப் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
