தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் காய்ச்சலால் சூடேறியுள்ளது. இதில் ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் ‘ஸ்டார்’ தொகுதியாக உருவெடுத்துள்ள திருச்சி கிழக்கு தொகுதியின் பக்கமே திரும்பியுள்ளது. ஆளுங்கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே கௌரவப் போராட்டமாக மாறப்போகும் இந்தத் தேர்தல், இரு தரப்பிற்கும் தங்களின் பலத்தை நிரூபிப்பதற்கான ஒரு முக்கியக் களமாகும்.
கடந்த பொதுத்தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் அவர்கள் சுமார் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வீழ்த்தி அசாத்திய வெற்றியைப் பதிவு செய்திருந்தார். இதனால், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அந்த வெற்றியைத் தக்கவைப்பது மட்டுமின்றி, விஜய் வாங்கிய வாக்குகளை விட தவெக வேட்பாளர் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற வேண்டும் என்பதைப் பனையூர் தலைமை தங்களின் பிரதான இலக்காகக் கொண்டுள்ளது. இத்தொகுதியைக் கைப்பற்ற தவெக சார்பில் கு.ப.கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி வேட்பாளராகக் களம் காண்பது கிட்டத்தட்ட முடிவாகியுள்ளது.
மறுபுறம், இழந்த தங்களின் கோட்டையை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்று அறிவாலயம் தீவிரமாக வியூகம் வகுத்து வருகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதில் அக்கட்சியின் தலைமை உறுதியாக உள்ளது. ஒருவேளை தவெக மீண்டும் வென்றாலும், அவர்களின் வாக்கு வித்தியாசம் வெறும் 1,000 அல்லது 2,000 என்ற மிகச் சொற்ப அளவில் மட்டுமே இருக்க வேண்டும்; தவெக-விற்குப் பெரும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று திமுக கணக்கு போடுகிறது. திமுக தரப்பில் அன்பில் மகேஷை களம் இறக்க தலைமை யோசித்தாலும், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் பெரும்பாலான தலைவர்களின் சாய்ஸாக இனிகோ இருதயராஜ் முன்னிலையில் இருக்கிறார்.
