Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள், தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நறியூத்து கிராம மக்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்புக்கொடிகளை கட்டி, எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

“எங்கே சுதந்திரம்? நாங்களும் மக்கள் தானே? எங்களுக்கு சுதந்திரம் வேண்டாமா? நாங்கள் என்ன அகதிகளா?” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் கிராமம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. தங்களது பூர்வீக நிலங்களில் பல தலைமுறைகளாக வசித்து வரும் நிலையில், தற்போது வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளதை எதிர்த்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Republic Tamil

மேகமலை மற்றும் வருசநாடு வனப்பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் சுமார் 5 தலைமுறைகளாக விவசாயம் செய்தும், கால்நடைகள் வளர்த்தும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக நறியூத்து கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருவதாகவும், தங்களுக்கு முறையான பட்டா மற்றும் சாலை வசதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  விவசாயிகளே உஷார்! தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களை குறிவைக்கும் எல்-நினோ -மத்திய அரசு போட்ட ரெட் அலர்ட்!

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 98 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Republic Tamil

தங்களுக்கு பட்டா வழங்காதது அரசின் தவறு என்றும், அதற்காக தங்களை அகதிகளைப் போல வெளியேற்றக் கூடாது என்றும் மலைவாழ் மக்கள் வலியுறுத்துகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக மறுஆய்வு மனு தாக்கல் செய்து, தங்களது வாழ்வாதார உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தலைமையில் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 2006-ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தின்படி தங்களுக்கு உள்ள சட்டப்பூர்வ உரிமைகளை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வலிமையாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையும் படியுங்க  "கொழுந்துவிட்ட தீ… வெடித்த சிலிண்டர்! நெற்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து!"

Republic Tamil

இதுதொடர்பாக முதலமைச்சரை சந்தித்துப் பேசியதாகவும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தேனி மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு என்றும் துணையாக இருக்கும்; உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி உரிய தீர்வு காண்போம்” என அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் மலைவாழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மக்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், “எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லையே” என மலைவாழ் மக்கள் எழுப்பியுள்ள குரல், அவர்களின் வாழ்வாதார உரிமை மற்றும் நீண்டகால குடியிருப்பு பிரச்சனையை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. தங்களது பூர்வீக வாழ்விடத்தைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago