https://republictn.com/

மக்கள் சொன்னதையெல்லாம் செய்து கொடுத்தோம். நல்லது செய்ததற்கு ஓட்டு போடுவீர்கள் என நினைத்தோம் என முன்னாள் திமுக அமைச்சர் மூர்த்தி கவலை தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசிகையில், “கருணாநிதி மக்களுக்காக நிறைய செஞ்சிருக்காரு. அவரை கொண்டாட வேண்டும் என பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. அதைப் பற்றி நினைத்தும் ஒரு பயனும் இல்லை. மக்கள் நல்ல பாடத்தை இந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்திருக்கிறீர்கள். அந்த பாடத்தை கொடுத்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.

அப்போது அந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த திமுக தொண்டர்கள் சிலர் உற்சாக மிகுதியில் மூர்த்தி சோகமாக பேசியதை ஏதோ புகழ்ந்து பேசுவதாக எண்ணி கை தட்டினர். அதனைக் கண்டு டென்ஷனான அவர், “திமுக தோற்று போய் விட்டது என சொல்லிக் கொண்டிருக்கிறேன். கைதட்டுகிறீர்களே, அதனால் தான் நாம் விளங்காமல் இருக்கிறோம். திமுக இப்படி நாசமாக போனதுக்கு காரணம் திமுகக்காரன் தான்.

ஏனென்றால் யார் நம்முடைய ஏரியாவுக்கு நல்லது செய்திருக்கிறார் என மக்கள் பார்க்கவில்லை. மக்கள் சொன்னதையெல்லாம் செய்து கொடுத்தோம். நல்லது செய்ததற்கு ஓட்டு போடுவீர்கள் என நினைத்தோம். ஆனால் வீட்டு குழந்தைகள் சொன்னார்கள் என தீர்மானித்து வாக்களித்துள்ளீர்கள். இன்றைக்கு அதைப் பற்றி பேசுவதற்கு திமுக விரும்பவில்லை.

இந்த இயக்கம் எப்போதும் மக்கள் பிரச்னைக்காக முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும். இந்த நிகழ்ச்சியில் அரசியல் பேச நான் விரும்பவில்லை. திமுக உணர்வு இருந்தாலே இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. அப்படிப்பட்ட திமுக குடும்பத்தில் இருந்துக் கொண்டு வீட்டு குழந்தைகள் சொன்னார்கள் என ஓட்டை மாற்றி போட்டு விட்டார்கள். இதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. இதைவிட பல பிரச்னைகளை எல்லாம் சந்தித்து தான் இந்த இயக்கத்தை கட்டிக் காத்துள்ளார்கள். இப்போது உள்ள திமுக தலைவர் ஸ்டாலினும் அதைத்தான் செய்வார்” என மூர்த்தி தெரிவித்தார்.

திமுக அரசில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்த மூர்த்தி, சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கினார். அவர் தவெக வேட்பாளர் கார்த்திகேயனிடம் சுமார் 16,540 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த தேர்தலில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தொடங்கி 16 அமைச்சர்கள் தோல்வியடைந்தனர். அதில் மூர்த்தியும் ஒருவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago