Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சமீபத்தில் அளித்திருந்த ஒரு நேர்காணலில் பேசிய சில கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்திய நிலையில், நடிகர் மகேந்திரன் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் மகேந்திரன். சமீபத்தில் நான் அளித்திருந்த ஒரு நேர்காணலில் பேசிய சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட தளங்களில் வெளியான கருத்துகளைப் பார்த்தபோது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

நான் மிகவும் மதிக்கும் பலரும் என்னைப் பற்றிப் பேசினார்கள். அவர்கள் ஒரு நிமிடம் யோசித்திருந்தால், ‘மகேந்திரன் இதைச் சொல்ல வரவில்லை; வேறு ஒரு கருத்தைத் தெரிவிக்க முயன்றார்’ என்று புரிந்துகொண்டிருப்பார்கள்.

ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும், அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் பேசிய கருத்துகளுக்கான விளக்கத்தை நேரடியாக அளிக்க விரும்புகிறேன்.

நான் ‘கேள்வி கேட்டால் கரண்ட் வந்துவிடுமா?’ என்று கூறியிருந்தேன். அந்தக் கேள்வி பொதுமக்களுக்கானது அல்ல. மக்களின் உணர்வுகளையும் மின்சாரப் பிரச்சினைகளையும் வைத்து அரசியல் செய்யும் சிலருக்காகத்தான் அந்தக் கேள்வியை எழுப்பினேன்.

இதையும் படியுங்க  ''உனக்கு அவிழ்கிறது தானடா வேலையே...' விஜய் நீயெல்லம் PM கனவு காணலாமா..? ஆர்.எஸ்.பாரதி ஆத்திரம்..!

அதேபோல், ‘ஆறு மாதங்கள் கால அவகாசம் கொடுங்கள்; கேள்வி கேட்காதீர்கள்’ என்றும் கூறியிருந்தேன். அதற்குக் காரணம், ஆட்சிக்கு வரும்போது ஒரு தலைவரே ‘எனக்கு ஆறு மாதங்கள் கால அவகாசம் கொடுங்கள்; அனைத்தையும் சரிசெய்து நல்ல ஆட்சியை வழங்குவேன்’ என்று கூறியிருந்தார்.

அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையால் மக்கள் அவருக்கு அந்த அவகாசத்தை வழங்கினார்கள். அதே கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நான் அந்தக் கருத்தை தெரிவித்தேன்.

மேலும், ‘சோலார் சிஸ்டம்’ குறித்து பேசியது என்னுடைய தவறுதான். அது வார்த்தைப் பிழை என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் மிகப் பெரிய கல்வியாளர் அல்ல. மிகவும் சாதாரணமான மாணவன். எனவே, ‘சோலார் எனர்ஜி’, ‘சோலார் பவர்’ அல்லது ‘சோலார் பேனல்’ என்று தெளிவாகக் கூறியிருக்க வேண்டும்.

நான் சொல்ல வந்தது என்னவென்றால், கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையம் முழுமையாக சோலார் மின்சக்தி மூலம் இயங்கி வருகிறது. உலகிலேயே அந்த வகையில் முன்னோடி விமான நிலையமாக அது திகழ்கிறது. அதை பார்த்தபோது, இதுபோன்ற திட்டங்கள் தமிழ்நாட்டிலும் அதிகமாக அமல்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது.

இதையும் படியுங்க  "அப்படியே இளம் சூர்யாவின் குரல்! மேடையில் மாஸாகப் பேசி இணையத்தைக் கலக்கும் தேவ் சூர்யா!"

அதேபோல், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக் காலத்தில் வீடுகளின் மேல் சோலார் பேனல்கள் அமைத்து மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

மக்கள் மின்தட்டுப்பாட்டால் பாதிக்கப்படாமல் இருக்கவும், மாற்று ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தவும் அந்தத் திட்டங்கள் உதவியிருக்க முடியும் என்பதைத்தான் நான் குறிப்பிட முயன்றேன்.

‘என் வீட்டிலிருந்து கரண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று நான் கூறியதும் நேரடிப் பொருளில் அல்ல. மக்களுடன் சேர்ந்து அவர்களுடைய கஷ்டங்களை நானும் பகிர்ந்து கொள்கிறேன் என்ற உணர்வைத்தான் வெளிப்படுத்தினேன். ஆனால் அந்தக் கருத்துகள் பல இடங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன.

மேலும், எனக்கு அகங்காரம் அதிகம், பிறரை மதிக்க மாட்டேன் என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. ஒரு இயக்குநரிடம் கால்மேல் கால் போட்டுக் கொண்டு பேசினேன் எனக் கூறப்பட்ட சம்பவமே நடந்ததில்லை. அந்தக் கருத்தை வெளியிட்ட நபரிடம் நேரடியாகத் தொடர்புகொண்டு கேட்டபோது, அது வேடிக்கையாகச் சொன்ன விஷயம் என்று அவர் விளக்கம் அளித்தார்.

என்னைப் பற்றி விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. நான் சரியாக நடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள். என் படம் நன்றாக இல்லை என்றால் சொல்லுங்கள். அதை ஏற்றுக்கொண்டு என்னைத் திருத்திக்கொள்வேன்.

இதையும் படியுங்க  "கிராமத்து கதைகளின் நாயகனுக்கு விடை கொடுத்த தமிழகம்: கண்ணீர் கடலில் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு!"

ஆனால் மக்களின் கஷ்டங்களைப் பார்த்து சிரிக்கிறேன், அவர்களை ஏளனமாகப் பேசுகிறேன் போன்ற குற்றச்சாட்டுகளை மட்டும் தயவுசெய்து என் மீது சுமத்த வேண்டாம்.

இன்று நான் இருக்கும் நிலைக்கு காரணம் மக்கள்தான். அவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன், மதிக்கிறேன். என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் பழகியவர்களுக்கும் அது நன்றாகத் தெரியும்.

என்னுடைய கருத்துகள் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன். தேவைப்பட்டால் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். அதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

இந்த கடினமான நேரத்தில் என்னை ஆதரித்து தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்புகொண்ட நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago