தன்னோட புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கிறார் அதிமுகவில் இருந்து சமீபத்தில் தவெகவில் இணைந்த சி.விஜயபாஸ்கர். ஆனால், மாவட்ட அமைச்சரான பர்வேஸ் அதற்கு இடம் கொடுக்காமல் கறார் காட்டுவதாகச் சொல்கிறார்கள்.
புதுக்கோட்டை விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பனையூரில் தவெகவில் இணைகிற விழாவை முதல்வர் தரப்பு நேரலையில் பார்த்துள்ளார். அப்போது எல்லா விஷயத்திலும் முந்திக்கொண்டு தன்னை மேடையில் முன்னிலைப்படுத்திய விஜயபாஸ்கரின் நடவடிக்கைகளை முதல்வர் தரப்பு ரசிக்கவில்லை என்கிறார்கள்.
ஒரு சில முன்னாள் அமைச்சர்களின் பெயர்களை சொல்லி அவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள். இவர் மட்டும் ஏன் இவ்வளவு பரபரப்பாகிறார் என கமெண்ட் அடித்துள்ளார்கள். அடுத்து புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களை முதல்வர் சந்திக்கிறபோது கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கரூர் நிகழ்ச்சியை சிறப்பா செய்யணும் என விஜய் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க, ”நாங்க சிறப்பா செஞ்சிடுறோம்” என புதுக்கோட்டை விஜய பாஸ்கரும் முந்திக்கொள்ள, ஆனால் அவரை விஜய் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.
அதன் பிறகு இரண்டு முறை கரூர் விஜய பாஸ்கரிடம் போனில் முதல்வர் தரப்பு பேசி இருப்பதாக சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னோட ஆதரவாளர்களுக்கு ஒன்றிய செயலாளர்கள், அரசு வழக்கறிஞர் பதவிகளையும் கொடுக்க வேண்டும் என மாவட்ட அமைச்சர் பர்வேசிடம் ஒரு லிஸ்ட்டை கொடுத்தாராம் விஜயபாஸ்கர். அதை நிராகரித்த அமைச்சர் பர்வேஸ், ”மாவட்ட விவகாரங்களில் தலையிட வேண்டாம். எதுவாக இருந்தாலும் கட்சி மேலிடத்தில் பேசிக்கொள்ளுங்கள்” என கறாராக சொல்லிவிட்டார் என்கிறார்கள்.
