https://republictn.com/

தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 50 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, முந்தைய திமுக மற்றும் அதிமுக அரசுகளின் அதே நிர்வாகப் பாணியைத் தான் பின்பற்றி வருகிறதா என்ற விவாதம் கிளம்பியுள்ளது. தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், முறைகேடான தேர்வு முடிவுகள் மற்றும் குமரி மாவட்ட அணுக்கனிம சுரங்க விவகாரத்தில் தவெக அரசு எடுத்துள்ள சில முடிவுகள், முந்தைய ஆட்சிகளின் தொடர்ச்சியாகவே இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் தனது முகநூல் பக்கத்தில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தனது முகநூல் பதிவில், ”ஒன்றையடுத்து ஒன்றென இடி மேல் இடியாக உள்ளது. அதிமுக, திமுக பாதையில் தானும் அச்சுப் பிறழாமல் அடியெடுத்து வைக்கிறதோ தவெக..,’ என்பதற்கான அறிகுறிகளை காண்கிறேன். எது நடக்கக் கூடாது’ என அரசு ஊழியர்களும், ஓய்வூதியர்களும் இந்த அரசுக்கு கோரிக்கை வைத்தார்களோ, அது தொடர்வதற்கு மீண்டும் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு விட்டனர்.


திமுக ஆட்சியில் மோசடியாக நடத்தப்பட்ட உதவிப் பேராசிரியர் தேர்வை ரத்து செய்து, புதிய தேர்வு நடத்தி நேர்மையான முறையில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து, அந்த மோசடி ரிசல்டை அப்படியே வெளியிட்டு அமைதி காக்கிறார்கள்! இதனால், கல்விச் சூழல் பாழாகி மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கபடுகிறது.

கிராமப் புற ஊரக வேலை வாய்ப்பான 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு முழுப் பொறுப்பு ஏற்று நடத்திய நிலை மாறி, அதில் மாநில அரசும் 40 சதவிகித நிதியை போட்டு நடத்த வேண்டும் என்ற அராஜகத்தை மெளனமாக ஏற்றுக் கொண்டதில் வருத்தம் இருந்தாலும், 100 நாள் என்பது 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டதற்கும், திட்டம் நிறுத்தப்படாமல் தொடர்வதற்கும் ஒரு வகையில் ஆறுதல் படலாம்.

ஆனால், இந்த கனிம வளத்திற்காக மக்களை கண்ணீர் கடலுக்குள் தள்ளுவதற்கு உடன்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இயற்கை விரோத, மனித நலனுக்கு எதிரான இந்திய அருமணல் ஆலை ஒன்று மத்திய அரசால் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆலைக்கு தேவையான அணுக் கனிம மூலப்பொருட்களை வழங்கு கிள்ளியூரை ஒட்டியுள்ள கிராமங்களில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசுக்கு அதிமுக தலைமையிலான தமிழக அரசு 1,144 எக்டேர் நிலத்தை 2020-ஆம் ஆண்டில் தூக்கிக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து அந்த நிலங்களில் அணுக் கனிமச் சுரங்கம் அமைக்க ஒதுக்கீடு செய்து 2021-ஆம் ஆண்டு மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.

இதன் அடுத்தக்கட்ட முன்னெடுப்பாக, திமுக ஆட்சியில் அங்கு அணுக் கனிம சுரங்கம் அமைப்பதற்கான பொது மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் 2024-ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெற ஆணை பிறப்பிக்கப்பட்டது. ’’தேவையில்லை என்ற ஒன்றுக்கு எதற்கு கருத்து கேட்பு? இது எங்கள் தலையில் திணிக்கும் முயற்சியே’’ என கடும் எதிர்ப்பு தெரிவித்து, திமுக அரசின் முயற்சியை மக்கள் முறியடித்தனர்.

ஆனால், அணுக்கனிம சுரங்கத்தை அமைப்பதில் பின்வாங்காத மத்திய அரசு, கொள்ளை லாபம் தரும் முப்பது விதமான அணுக் கனிமங்களை தோண்டி எடுப்பது அரசின் முடிவு. அதற்கான சுரங்கங்களை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க தேவையில்லை. சுற்றுச் சூழல் அனுமதியை மாநில அரசு வழங்க வேண்டியதில்லை, இனி மத்திய அரசே வழங்கும் என்று 2025-ஆம் ஆண்டில் ஆணை பிறப்பித்தது. இதற்கு அன்று ஆட்சியில் இருந்த திமுக அரசு அமைதி காத்தது.

ஏற்கனவே இங்கு இயங்கும் இந்திய அருமணல் ஆலை கதிர்வீச்சினால் அங்குள்ள மக்கள், புற்றுநோய், ஆஸ்துமா, கருச்சிதைவு, சிறுநீரகப் பாதிப்பு, தோல்நோய், போன்ற நோய்களோடு போராடி வருகின்றனர். போதாக்குறைக்கு நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட கடலோரக் கிராமங்களில் முக்கால்வாசி கிராமங்கள் தாதுமணல் கொள்ளையால் கந்தர்கோலமாகி சிதைந்து, சீரழிக்கப்பட்டுள்ளன.
சூறையாடப்பட்ட தாது மணல் கொள்ளையால், அங்கு பல கிராமங்களின் கடற்கரைகளையே கடல் விழுங்கி செரித்துவிட்டது. நாற்பதாண்டுகளுக்கு முன்பு ருசியாக இருந்த குமரி மாவட்ட நிலத்தடி நீர், தற்போது உப்புக் கரிக்கிறது. மொத்தத்தில் இந்த தென் தமிழகத்தையே மக்கள் வாழத்தகாத இடமாக மாற்றி அமைக்க மத்திய பாஜக அரசு துடிக்கிறது.

மத்திய அதிகார வர்க்கத்தை பொறுத்த வரை கனிம வளங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை உயிருள்ள மனிதர்களுக்கு தரத் தயாராக இல்லை. இந்தச் சூழலில் இப்போது அங்கே அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால், அங்குள்ள மக்களின் நிலை அதோ கதி தான். சொல்ல வார்த்தைகளில்லை.

ஆன போதிலும், தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறை அரசாணையில், கன்னியாகுமரியின் கிள்ளியூர் தாலுகாவின் கிராமங்களில் தாது மணல் எடுப்பதற்கான காலாவதி தேதியை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதானது அதிர்ச்சியளிக்கிறது! மானுடைத்தை அழிக்கும், இயற்கையை சூறையாடும் இந்த அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக தவெக அரசு ஒத்துப் போவது என்பது ஏற்கனவே அதிமுக, திமுக பாதையில் தானும் அடியெடுத்து வைப்பதையே காட்டுகிறது. இது மாற்றம் காண விழையும் மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளிக்கிறது.

கட்சிகளைக் கடந்து, ஒட்டுமொத்த இந்த மண்ணின் மைந்தர்களும் ஒன்றுபட்டு நின்றால் மட்டுமே மத்திய பாஜக என்ற மேலாதிக்க கொடுரர்களை எதிர்கொள்ள முடியும். ஒட்டுமொத்த இந்தியாவில் தமிழகத்தின் பரப்பளவு 4 சதவிகிதம் மட்டுமே! ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் நமது தமிழகத்தின் பங்கு 7 சதவிகிதமே!

ஏற்கனவே மாநில அரசு அதிகாரங்கள் முற்றிலும் பறிபோய்விட்ட சூழலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று மட்டுமல்ல, ஏன் இங்குள்ள தமிழக பாஜகவே கூட இந்த மண்ணையும், மக்களையும் பாதுகாக்க மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்.

தவெக ஆட்சி பெரும்பான்மை பலத்தை பெறாது இருப்பதால், இந்த ஆட்சிக்கு திமுகவின் கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு நடக்கிறது என்று குத்திக் காட்டி, ”இந்த ஆட்சி மூன்று மாதம் கூட தாங்காது” என்று ஸ்டாலின் சொல்லி வருவதால், தவெக அரசு தங்களை தற்காக்க சில சமரசங்களை செய்கிறது.

இந்த ஐம்பது நாட்களுக்குள்ளாக தவெக எம்.எல்.ஏக்களை தூக்கி விலை பேசியுள்ளது திமுக என்ற வகையில் மூவர் கைதாகியுள்ளனர். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஆதரவாக வாக்களிக்க, செந்தில் பாலாஜி சகோதரர்களை வைத்து ‘சூட்கேஸ் கேம்’ செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

ஏனென்றால், திமுக, அதிமுகவை பொறுத்த வரை இரண்டு கட்சிகளுமே பாஜகவின் செல்லப் பிள்ளைகள்! அதுவும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் இன்றைக்கு இந்தியாவின் மிகப் பெரிய தொழில் அதிபராக அதானி, அம்பானி, ஆர்.எஸ்.எஸ்சுடன் நெருக்கமாக உள்ளார்.
நாம் பிரிந்திருக்கும் வரை, ஆட்சியில் யார் அமர்ந்தாலும் பாஜகவின் ஆணைக்கே அடிபணிவர். தமிழகத்தின் எதிர்காலம் தமிழர்களின் ஒற்றுமையில் தான் உள்ளது. கட்சிகளைக் கடந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் இங்கு சாத்தியப்படுமா? தெரியவில்லை” என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago