Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

அரசியலில் கொள்கைகளை விட ‘ஆட்சியையும் அதிகாரத்தையும்’ கைப்பற்றுவதே பிரதான டார்க்கெட் என்பதை அரசியல் களம் பலமுறை நிரூபித்துள்ளது. பாசிசப் பாணியில் அதிகாரத்தை நோக்கி நகர்ந்த பாஜக-வின் அதே உத்தியைத்தான், தமிழகத்தில் தற்போது புதியதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசும் கையில் எடுத்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை வென்று, தவெக அரியணை ஏறியிருந்தாலும், கடந்த 50 நாட்களாக அந்த அரசு சந்தித்து வரும் விமர்சனங்கள் மாற்று அரசியலை விரும்பிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதிமுக-வை அழிக்கும் தவெக; முடங்கிப்போன திமுக
அதிகாரப் பசியில் தவெக தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக-வை அரசியல் ரீதியாக அழிக்கத் தொடங்கியுள்ளது. அதேநேரம், தேர்தலில் பலத்த அடி வாங்கிய திமுக-வால் தற்போதைக்கு மீண்டெழுந்து ஆட்சியைப் பிடிக்கும் சூழல் கனிந்து வரவில்லை. ஆனாலும், தவெக அரசை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்று திமுக தற்போதே திரைக்குப் பின்னால் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது.

இதையும் படியுங்க  "ஆரம்பம் அதிரடி... ஆனா வாக்குறுதிகள் எப்போ? CM விஜய்யின் 100 நாள் ஆட்சிக்கு கௌதமன் போட்ட மார்க்!"

தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக ‘சூட்கேஸ் கேம்’ விளையாடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அம்பலமாகியுள்ளன. ஆனால், திமுக ஆட்சியில் இருந்தபோது மக்கள் போற்றும் வகையில் நல்லாட்சி நடத்தியிருந்தால், இன்று தவெக எம்.எல்.ஏ-க்களை பேரம் பேசி இழுக்கும் இந்த இழிவான தவறான வழிக்குச் செல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காது. மக்களே மீண்டும் திமுக-வைத் தேர்ந்தெடுத்து இருப்பார்கள். திமுக செய்த தவறுகள்தான் இன்று அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது.

50 நாட்களில் தவெக மீது குவியும் விமர்சனங்கள்
திமுக, அதிமுக-விற்கு மாற்றாக தவெக-வை அரியணையில் அமர்த்திய மக்களுக்கு, தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஏமாற்றத்தையே பரிசாக அளித்து வருகிறது என்ற குற்றச்சாட்டை மூத்த பத்திரிகையாளர்கள் முன்வைக்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் கிராமங்களில், மக்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடும் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான காலாவதி தேதியை தவெக-வின் இயற்கை வளங்கள் துறை நீட்டித்து ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதத் திட்டத்திற்கு தவெக அரசு ஒத்துப் போவது, தென் தமிழக மக்களைக் கண்ணீர் கடலில் தள்ளியுள்ளது. “எது நடக்கக் கூடாது” என்று அரசு ஊழியர்களும், ஓய்வூதியர்களும் கோரிக்கை வைத்தார்களோ, அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு முந்தைய அரசுகளைப் போலவே யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தவெக ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதையும் படியுங்க  திமுக தனித்துப் போட்டி… வெற்றியா? தோல்வியா? வரலாறு என்ன சொல்கிறது?

முறைகேடுகளுக்கு மௌன அங்கீகாரம்
திமுக ஆட்சியில் மோசடியாக நடத்தப்பட்ட உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளை ரத்து செய்து, நேர்மையான முறையில் மறுதேர்வு நடத்துவார்கள் என்று நம்பிய இளைஞர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அந்த மோசடி ரிசல்ட்டை அப்படியே வெளியிட்டு தவெக அரசு மௌனம் காப்பது கல்விச் சூழலையே பாழாக்கியுள்ளது.

திமுக-விற்கு நேர்ந்த அதே கதி..
திமுக தங்களை தற்காத்துக் கொள்ளாமல் செய்த தவறுகளாலும், மக்கள் விரோதப் போக்கினாலும் தான் இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்து நடுரோட்டில் நிற்கிறது. ஆனால், அதே தவறுகளையும், பாசிச பாஜக-விடம் செய்யும் சமரசங்களையும் தான் இன்று புதியதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசும் மிகத் துணிச்சலாகச் செய்து வருகிறது.

மத்திய அதிகார வர்க்கத்தின் ஆணைக்கு அடிபணிந்து, மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதாரத்தைப் பணையம் வைக்கும் தவெக அரசு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இன்று அதிகாரம் கையில் இருக்கிறது என்ற மமதையில் தவெக செயல்படலாம். ஆனால், இந்தத் தேர்தலில் திமுக-வுக்கு மக்கள் என்ன கதியை உருவாக்கினார்களோ, அதே கதிதான் அடுத்த தேர்தலில் தவெக-விற்கும் நேரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தமிழகத்தின் எதிர்காலம் என்பது டெல்லிக்கு அடிபணிந்து போகும் சுயநல அரசியலில் இல்லை. தமிழர்களின் ஒற்றுமையிலும், மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியலிலும் மட்டுமே சாத்தியப்படும். திமுக செய்த தவறுகளையெல்லாம் இப்போது தவெக செய்து வருகிறது. இந்தத் தேர்தலில் திமுகவுக்கு நேர்ந்த அதே கதி அடுத்த தேர்தலில் தவெகவுக்கு நேரும்” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இதையும் படியுங்க  "3.70 லட்சம் புகார்கள்.. மின்கட்டணக் குளறுபடியால் திணறும் மக்கள்: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த நெருக்கடி!"
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago