https://republictn.com/

திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் அருகே உள்ள கல்மந்தை காலனியைச் சேர்ந்த 22 வயதான ராஜமாணிக்கம் என்ற தொழிலாளி, அப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் போதை ஊசி ஒன்று கிடந்ததையடுத்து, முதற்கட்ட விசாரணையில் போதை ஊசியை செலுத்திக்கொண்டபோது ராஜமாணிக்கம் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவருக்கு போதை ஊசி எங்கிருந்து கிடைத்தது, அவர் தொடர்ந்து போதை ஊசி பயன்படுத்தி வந்தாரா அல்லது இது முதல் முறையா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பு, கடந்த 8ஆம் தேதி திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், தனது காதலருடன் சேர்ந்து மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் போதை ஊசி செலுத்திக்கொண்டபோது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு இளைஞர் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போதைப் பழக்க மீட்பு நிபுணர்கள் கூறுகையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், தங்கள் குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகியிருப்பதை பெற்றோர் வெளிப்படையாக தெரிவிக்க தயங்குவதாகக் கூறுகின்றனர்.

குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் தெரிந்தவுடன், உடனடியாக மருத்துவ ஆலோசனையும், போதை விடுப்பு சிகிச்சை (De-addiction) மற்றும் மறுவாழ்வு (Rehabilitation) சிகிச்சையும் அளித்தால், அவர்களை முழுமையாக மீட்டெடுக்க முடியும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், ஒரு வகை போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், படிப்படியாக மதுபானம், புகைப்பழக்கம் மற்றும் பிற போதைப்பொருட்களுக்கும் அடிமையாகும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே, பெற்றோர் மட்டுமின்றி ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூக அமைப்புகளும் இணைந்து இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் போதைப்பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அதனால் இளைஞர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்வது கவலைக்குரியதாக இருப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்களை காவல்துறை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உரிய மனநல ஆலோசனை மற்றும் மறுவாழ்வு சிகிச்சை வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சியில் வெறும் 20 நாட்களுக்குள் போதை ஊசி காரணமாக இரண்டு உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பது, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago