திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில், மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளைத் தனியாக தனது அறைக்கு அழைத்து அத்துமீறலில் ஈடுபட்டதுடன், இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.
பள்ளிவிடை, மாடக்குடி, சாத்தம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் இந்தப் பள்ளி, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஜெயராஜ் என்பவர் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றதாகக் கூறப்படுகிறது. பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவர் மாணவிகளிடம் வரம்பு மீறி நடக்கத் தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனது அலுவலக அறையில் உள்ள பீரோவில் இருந்து பொருட்களை எடுத்து வருமாறு கூறி, மாணவிகளைத் தனியாக அழைப்பது தலைமை ஆசிரியர் ஜெயராஜின் வழக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தைப் பயன்படுத்தி மாணவிகளிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் என்பதால் அச்சமடைந்த மாணவிகள், ஆரம்பத்தில் இதுகுறித்து வெளியில் தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை தனது அறைக்கு வரவழைத்த தலைமை ஆசிரியர் ஜெயராஜ், அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், “நாம் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கலாம்” என்றும் கூறி, அந்த மாணவியை மிரட்டும் தொனியில் பேசி அச்சத்தை ஏற்படுத்தியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறையிலிருந்து வெளியேறிய அந்த மாணவி, வீட்டிற்குச் சென்று தனக்கு நேர்ந்த சம்பவத்தைப் பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பெற்றோர், உடனடியாக இதுகுறித்து உறவினர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த அரசு உதவி பெறும் பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வருவதைக் கண்ட தலைமை ஆசிரியர் ஜெயராஜ், தன் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில், பள்ளியின் பின்புற வழியாக அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
இந்தப் போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தப்பியோடிய தலைமை ஆசிரியர் ஜெயராஜ் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் ஜெயராஜை கைது செய்வதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், தனிப்படை போலீசார் ஜெயராஜை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயராஜ், பள்ளியின் தலைமை ஆசிரியராக மட்டுமல்லாமல், அந்தப் பள்ளியுடன் தொடர்புடைய மதப் பணியிலும் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவிகளுக்கு பாதுகாப்பான கல்விச் சூழலை வழங்க வேண்டிய பொறுப்பில் இருந்த ஒருவரே இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஜெயராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித் துறை சார்பில் அவர் மீது எடுக்கப்பட உள்ள துறைரீதியான நடவடிக்கைகள் குறித்தும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்துள்ள இந்தப் புகார், மாணவிகளின் பாதுகாப்பு குறித்தும் கேள்வியை எழுப்பியுள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விசாரணையின் முடிவில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையிலேயே குற்றச்சாட்டுகளின் முழுமையான உண்மை நிலை தெரியவரும்.
