https://republictn.com/

விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், கடைசி நேரத்தில் ஆதரவு வாபஸ் பெறப்பட்டதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சிகள் உள்ளதாக தவெக நிர்வாகிகள் குமுறுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள், ”அமமுக மன்னார்குடி எம்.எல்.ஏ பாண்டிச்சேரியில் இருந்து பனையூருக்கு வந்திருக்கிறார். தனது கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார். யாரும் அவரைக் கடத்தவில்லை. ஒன்றில் அவர் விரும்பி வந்திருக்க வேண்டும். இல்லையேல் அது ஒரு ‘செட் அப்’ ஆக இருக்க வேண்டும். அதாவது யாரோ திட்டமிட்டு அவரை அனுப்பிவைத்திருக்க வேண்டும்.

அதேபோல இந்திய முஸ்லீம் லீக் கட்சியில் உள்ள இரண்டு எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் தனது ஆதரவை தவெகவுக்கு கொடுத்திருக்கிறார். விஜய் ஆளுனர் மாளிகையில் இருந்து திரும்பியவுடன், “காலை 11 மணிக்கு பதவியேற்கிறார்” என்ற அறிவிப்பு வந்தவுடன், சொல்லி வைத்ததுபோல தனது ஆதரவை வாபஸ் வாங்குகிறார். மன்னார்குடி எம்.எல்.ஏ- வும் இப்போது மாற்றிப்பேசுகிறார். அந்த 11 மணி பதவியேற்பு அறிவிப்பு வரும்வரை காத்திருந்தாரோ என்னமோ?

விசிக- வின் நேற்றைய ஏற்பாடு எப்படி என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் ஏதோஒரு உறுதியான வாக்குறுதி கொடுக்கப்போய்த்தான், விஜய் நம்பிக்கையோடு ஆளுனரிடம் சென்று 120 ஐ காண்பித்திருக்கிறார். ஆனால் சட்டென்று “4 சீட்டுக்கள் குறைகின்றன” என்று ஆளுனர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியானமை உண்மையில் பேரதிர்ச்சியாகவே இருந்தது. அது கொஞ்சம் Unusual ஆக இருந்தது.

உண்மையில் விஜய்யை ஏமாற்ற, உளவியல் ரீதியாக ஒரு தாக்கத்தைக் கொடுக்க, அவமதிக்க, நடத்தப்பட்ட நாடகமா இது என்கிற சந்தேகம் வருகிறது. நேற்றுமாலை தவெக தொண்டர்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குறுகிய நேரத்தில் அவ்வளவு பரபரப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தது. ஆனால் எல்லாமே பின்னர் தலைகீழாக மாறியது.

இது உண்மையிலேயே ஒரு ‘செட்டப்பாக’ இருந்து, விஜய்யை யாராவது பழிவாங்க நினைத்திருந்தால், உண்மையில் அவர்கள் பழிவாங்கியது ஒட்டுமொத்த தமிழக மக்களையுமே தவிர, விஜய்யை அல்ல!. இனி மீண்டும் யாரையாவது சேர்த்துக்கொண்டு ஆளுனர் மாளிகைக்கு விஜய் செல்லக்கூடும். அதைகூட முழுமையாக நம்ப முடியாது. பதவி ஏற்பதற்கு மேடையில் ஏறும் தருவாயில்கூட ‘ஆதரவை விலக்குகிறேன்’ என்று அவர்களில் யாரேனும் அறிவிக்கக்கூடும். யார் கண்டார்?

உண்மையில் விஜய்க்கு இருக்கும் மக்கள் செல்வாக்குக்கு இப்படியெல்லாம் இவர்களை கெஞ்ச வேண்டிய அவசியமே இல்லை. இன்னொரு தடவை தேர்தல் நடந்தால், மக்களுக்கு இருக்கிற கடுப்பில், வாக்குகளை அள்ளிக்குவித்து, 200+ உடன் சட்டசபைக்கு அனுப்பி வைப்பார்கள். எவ்வளவு தலைகீழாக நின்று முயற்சித்தாலும், விஜய்க்கான மக்கள் செல்வாக்கு இன்னும் இன்னும் அதிகரிக்குமே தவிர, அது குறையாது” என்கின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago