https://republictn.com/

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடல் பகுதியில் மீனவர் வலையில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த மர்ம பொருளை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

பழவேற்காடு சுற்றுவட்டாரத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் பழவேற்காடு ஏரியிலும் கடலிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வழக்கம்போல் பசியாவரத்தை சேர்ந்த தேவபிரகாஷ் என்பவர் தனது படகில் மேலும் நான்கு பேருடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தார்.

அப்போது அவர்களின் மீன்பிடி வலையில் சுமார் 10 கிலோ எடையுடைய, இரும்பால் ஆன, துருப்பிடித்த நிலையில் காணப்பட்ட வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் ஒன்று சிக்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து அந்த மர்ம பொருள் கரைக்கு கொண்டு வரப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அது காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மர்ம பொருள் ஒத்திகை பயிற்சியில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டா, ராக்கெட் லாஞ்சர் போன்ற வெடிபொருளா, அல்லது கடற்படை கப்பலிலிருந்து தவறி விழுந்ததா, அல்லது வேறு ஏதேனும் நாசவேலைக்கு பயன்படுத்தப்பட்டதா என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மீனவர் வலையில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago