சூர்யா, திரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதற்கிடையில், அண்மையில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி, அந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
அந்த பதிவில், “இதற்கு தொடக்கமாக இருந்த மனிதருடன் வாவ். தமிழக முதல்வராக அவரை பார்த்தது கனவு போல் உள்ளது. அதே அன்பு, அமைதி—எல்லாவற்றுக்கும் நன்றி விஜய் சார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினை தெரிவித்து, “கருப்பு” படத்தை நிராகரித்த விஜய் சாரை நீங்கள் விரும்புவது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் வெறும் 40 நிமிடங்களில் கதையை கேட்டு சம்மதம் சொன்ன எங்கள் அண்ணாவுக்கு துரோகம் செய்யாதீர்கள் எனக் கூறி ஆர்.ஜே. பாலாஜியை விமர்சித்தனர்.
இந்த சூழ்நிலையில், நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு செய்தியை பகிர்ந்து ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “அன்புடன் வழிநடத்துங்கள். கருணையுடன், தாராள குணத்துடன் இருங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள், சூர்யாவின் இந்த வேண்டுகோளை ஏற்று அமைதியடைந்துள்ளனர். அதே நேரத்தில், சிலர் “இனி இப்படிப்பட்டவர்களுடன் படம் செய்ய வேண்டாம்” என சூர்யாவுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
மேலும், சூர்யாவுக்கு தியேட்டர் ரிலீஸில் ஒரு பெரிய ‘கம் பேக்’ தேவைப்பட்ட நேரத்தில், திரையரங்குகளில் மாஸ் வெற்றியைத் தேடித் தந்த நாயகனை போற்றாமல், படத்தை நிராகரித்த ஒருவரை பாராட்டியது நியாயமில்லை என்று நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.
சுருக்கமாகச் சொன்னால், படம் வெற்றி பெற்ற பிறகு சூர்யாவின் உழைப்பையும், அவர் காட்டிய நம்பிக்கையையும் குறைத்து மதிப்பிடும் வகையில் ஆர்.ஜே. பாலாஜியின் செயல்கள் இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
