நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமாரின் தாயார் மோகினி மணி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வயது மூப்பால் காலமானார். இந்த செய்தியை அறிந்ததும் துபாயிலிருந்து உடனடியாக இந்தியாவிற்கு திரும்பிய அஜித், தனது தாயாரின் உடலை தோளில் சுமந்து இறுதி சடங்குகளில் கனத்த இதயத்துடன் பங்கேற்றார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்த நிலையில், தாயை இழந்த பெரும் சோகத்திலும் தனது தொழில்முறை பணிகளில் இருந்து விலகவில்லை அஜித் குமார். தற்போது மீண்டும் கார் பந்தயப் பயிற்சிக்கும் போட்டிகளுக்கும் திரும்பியுள்ளார்.
அவரது அதிகாரப்பூர்வ “அஜித் குமார் ரேசிங் (Ajith Kumar Racing)” எக்ஸ் (X) மற்றும் சமூக வலைதளப் பக்கத்தில், “Back at work with a heavy heart, but life must go on!” (கனத்த இதயத்துடன் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளேன், ஆனால் வாழ்க்கை நிச்சயமாகத் தொடர வேண்டும்!) என்று பதிவிடப்பட்டுள்ளது.
பிரான்சில் நடைபெறவுள்ள 24H European Series கார் பந்தயத்தின் 3-வது சுற்றில் பங்கேற்பதற்காக அஜித் தற்போது பிரான்ஸ் சென்றுள்ளார். தாயை இழந்த பெரும் சோகத்திலும் தனது தொழில்முறை அர்ப்பணிப்பை கைவிடாமல் ரேசிங் களத்திற்கு திரும்பியுள்ள அவரது மனஉறுதி ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறியும், உத்வேக வார்த்தைகளை பகிர்ந்தும் வருகின்றனர்.
இதற்கு முன்னதாக, பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி இரண்டாவது இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, அஜித் குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
