https://republictn.com/

நடிகர் சூர்யா அரசியலுக்கு வர உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்களுக்கு, அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், வீரமணி என்ற நிர்வாகி பேசும்போது, “காலம் முடிவு செய்து விட்டது; சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறியிருந்தார்.

அந்தப் பேச்சின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, சூர்யா விரைவில் அரசியலில் களமிறங்கப் போவதாக பல்வேறு வதந்திகள் பரவின.

இந்த நிலையில், அந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் அமைப்பாளர் ஹரிராஜ் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், நடிகர் சூர்யாவுக்கு தற்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கம் மூலம் ஏழை, எளிய மக்களுக்காக தொடர்ந்து சமூகப் பணிகளை மேற்கொள்வதே சூர்யாவுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அரசியல் தொடர்பான வதந்திகளை ரசிகர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்றும், நற்பணி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் செயல் தலைவர் அல்லது அமைப்பாளர் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், நடிகர் சூர்யாவின் அரசியல் வருகை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் அதிகாரப்பூர்வமற்றவை என்பதும், அவர் தற்போது திரைப்படங்கள் மற்றும் சமூக சேவைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago