அமரர் ஊர்தி வழங்கப்படாததால், உயிரிழந்த விவசாயியின் உடலை உறவினர்கள் 4 கிலோமீட்டர் தொலைவு வரை தோளில் சுமந்து சென்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் பத்ராசலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கண்டி வெங்கண்ணா, கடந்த வாரம் கடும் வெயிலின் காரணமாக தனது விவசாய நிலத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் பத்ராசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரது உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் அல்லது அமரர் ஊர்தி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி, வெங்கண்ணாவின் உடலை அவரது உறவினர்கள் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவு வரை தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அந்த மருத்துவமனையில் அமரர் ஊர்தி வசதி இருந்தபோதிலும், அது வெங்கண்ணாவின் குடும்பத்தினருக்கு ஏன் வழங்கப்படவில்லை என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
