https://republictn.com/

தெலங்கானா மாநிலத்தில், கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, பின்னர் காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் நாராயணகேட் மண்டலத்திற்குட்பட்ட கங்காப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தியம் ரெட்டி. அவரது மனைவி கல்பனா. இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நாராயணகேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய கல்பனாவுக்கு சிண்டு என்ற நபருடன் ரகசிய காதல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து, இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய கல்பனா திட்டம் தீட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்பு, கல்பனா தனது காதலன் உதவியுடன் முத்தியம் ரெட்டியை மானூர் மண்டலத்திற்குட்பட்ட எல்கோய் கிராம புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர், அதே பகுதியில் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் குழி தோண்டி, உடலை புதைத்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் எதுவும் நடக்காதது போல் நடித்த கல்பனா, சில நாட்கள் கழித்து தனது கணவர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கல்பனாவுக்கு வேறு ஒருவருடன் ரகசிய காதல் இருந்ததும், அவர் தனது கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட கல்பனாவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago