Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

அமெரிக்காவின் மிக நீண்ட காலம் சிறையில் இருந்த கைதியாகக் கருதப்பட்ட பிரான்சிஸ் கிளிஃபோர்ட் ஸ்மித் தனது 101வது வயதில் காலமானார். சுமார் 76 ஆண்டுகள் சிறை வாழ்க்கையை அனுபவித்த அவர், தனது வாழ்நாளில் எட்டு முறை மரண தண்டனையை எதிர்கொண்டு, ஒவ்வொரு முறையும் கடைசி நேரத்தில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் உயிர் பிழைத்தவர் என்ற வியக்கத்தக்க வரலாற்றைக் கொண்டவர்.

ஸ்மித்தின் கதை 1949ஆம் ஆண்டு தொடங்குகிறது. கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள ஒரு யாட்ச் கிளப்பில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தின்போது, பாதுகாப்புக் காவலர் குரோவர் ஹார்ட் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் பிரான்சிஸ் கிளிஃபோர்ட் ஸ்மித் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 25 வயது.

1950ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஸ்மித்துக்கு மின்சார நாற்காலி மூலம் மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்பு வெளியான நாள் முதல் இறுதி நாள் வரை தான் நிரபராதி என்றும், கொலை நடைபெற்றபோது தான் அந்த இடத்திலேயே இல்லை என்றும் ஸ்மித் தொடர்ந்து கூறி வந்தார்.

இதையும் படியுங்க  ”மனிதக் கடலில் மிதந்த காமேனியின் உடல்! ஸ்தம்பித்த ஈரான்! உலக வரலாற்றில் ஒரு மிரட்டலான இறுதிப் பயணம்!"

அவரது வழக்கில் பல்வேறு சட்டப் போராட்டங்களும் எதிர்பாராத திருப்பங்களும் ஏற்பட்டன. இதன் காரணமாக மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக எட்டு முறை தேதிகள் நிர்ணயிக்கப்பட்டன. ஒவ்வொரு முறையும் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக சட்டரீதியான தடைகள் ஏற்பட்டு, மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. மரண தண்டனை கைதிகளுக்கு வழங்கப்படும் கடைசி உணவும் எட்டு முறை ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது.

குறிப்பாக 1954ஆம் ஆண்டு, மின்சார நாற்காலியில் அவருக்கு தண்டனை நிறைவேற்ற இன்னும் இரண்டு மணி நேரமே இருந்த நிலையில், அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

ஸ்மித் நிரபராதி என்ற வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில், அவருக்கு எதிராக சாட்சியம் அளித்த முக்கிய பெண் சாட்சி ஒருவர் பின்னர் தான் பொய் சாட்சி அளித்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரை விசாரித்த முக்கிய காவல்துறை அதிகாரியான மேஜர் லியோ கரோல், கொலை நடைபெற்ற இடத்தில் ஸ்மித் இருந்தாரா என்பதே தனக்கு சந்தேகமாக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, அலபாமா சிறையில் இருந்த மற்றொரு கைதி ஒருவர், அந்தக் காவலரை தான்தான் சுட்டுக் கொன்றதாகவும், இந்தக் கொலைக்கும் ஸ்மித்துக்கும் தொடர்பில்லை என்றும் வாக்குமூலம் அளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அந்த வாக்குமூலம் நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல எனக் கூறி நிராகரிக்கப்பட்டதாகவும், ஸ்மித்துக்கு புதிய விசாரணை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  "பாகிஸ்தானில் அதிரடி! முன்னாள் கவர்னர், அமைச்சர்கள் உட்பட 4 முக்கிய தலைவர்களுக்கு 10 ஆண்டு சிறை!"

சுமார் 76 ஆண்டுகள் நீடித்த சிறைவாழ்க்கையில், 1967ஆம் ஆண்டு ஒருமுறை சிறையிலிருந்து தப்பியோடிய ஸ்மித், 12 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டார். 1975ஆம் ஆண்டு அவருக்கு 10 மாதங்கள் பரோல் வழங்கப்பட்டதாகவும், விதிமுறைகளை மீறியதால் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சிறையில் இருந்தபோது, தனது உணவில் கிடைக்கும் ரொட்டித் துண்டுகளை உடைகளில் மறைத்து எடுத்துச் சென்று பறவைகளுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதன் காரணமாக அவருக்கு “தி பேர்ட்மேன் ஆஃப் ஆஸ்போர்ன்” என்ற செல்லப்பெயரும் வழங்கப்பட்டது.

2020ஆம் ஆண்டு, அவரது வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து அரசாங்கக் கண்காணிப்பின் கீழ் முதியோர் மற்றும் சிறப்பு பராமரிப்பு மையத்தில் வசித்து வந்தார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக படுக்கையிலேயே இருந்த நிலையில், தனது 101வது வயதில் உயிரிழந்தார். அவரது வாழ்நாளின் இறுதிப் பகுதியில் டிமென்ஷியா எனப்படும் மறதி நோயாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்க  Metro city\'s should make road with protection In mind

76 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஸ்மித்துக்காக அரசின் வரிப்பணம் பெருமளவில் செலவிடப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால், தள்ளாத வயதில் படுத்த படுக்கையாக இருக்கும் ஒருவரை தொடர்ந்து சிறைக்காவலில் வைத்திருப்பது அவசியமா என்ற தார்மீக விவாதமும் அவரது வழக்கின் மூலம் எழுந்தது.

குற்றவாளியா, நிரபராதியா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், ஒரு மனிதர் எட்டு முறை மரண தண்டனையின் வாசல் வரை சென்று, ஒவ்வொரு முறையும் கடைசி நேரத்தில் உயிர் தப்பியது அவரது வாழ்க்கையை தனித்துவமானதாக மாற்றியுள்ளது.

1949ஆம் ஆண்டு தொடங்கிய கொலை வழக்கு, 76 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசம், எட்டு முறை மரண தண்டனை, எட்டு முறை கடைசி உணவு, சிறையிலிருந்து தப்பிய சம்பவம் என ஸ்மித்தின் வாழ்க்கை அமெரிக்க சட்ட வரலாற்றில் வியக்கத்தக்க பதிவாகவே நீடிக்கும்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago