Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியைச் சேர்ந்த நான்கு முக்கிய தலைவர்களுக்கு அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில், பஞ்சாப் மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான உமர் சர்பிராஸ் சீமா, முன்னாள் சுகாதார அமைச்சரான டாக்டர் யாஸ்மின் ரஷித், முன்னாள் அமைச்சரான மியான் மெஹ்மூதுர் ரஷித் மற்றும் முன்னாள் செனட்டரான இஜாஸ் சவுத்ரி ஆகியோர் அடங்குவர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி, இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் பரவலான வன்முறை வெடித்தது. அப்போது போராட்டக்காரர்கள் ராணுவ நிலைகள், அரசு கட்டிடங்கள் மற்றும் காவல்துறை வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம், பி.டி.ஐ. கட்சியின் நான்கு மூத்த தலைவர்களுக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இதையும் படியுங்க  அணு ஆயுத ரகசியம் கேட்ட பாகிஸ்தான்..! செக் வைத்த சீனா.! இந்தியாவுக்கு எதிராக பிளான்-B..!?

அதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான ஷா முகமது குரேஷி மீது போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கருதிய நீதிமன்றம், அவரை விடுதலை செய்துள்ளது.

இதனிடையே, இந்த தீர்ப்புக்கு இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசியல் பழிவாங்கும் நோக்கில் புனையப்பட்ட “பொய் வழக்கு” அடிப்படையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அக்கட்சி, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago