Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

New Government Bus

தமிழ்நாட்டில் புதிய அரசுப் பேருந்துகள் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி நிறங்களை பிரதிபலிக்கும் வகையில் மாற்றப்பட்டிருப்பதாக எழுந்துள்ள தகவல், தற்போது பெரும் அரசியல் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், அத்தம்பட்டி அருகே உள்ள ஜான்சன்பேட்டையில் செயல்பட்டு வரும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில், சேலம் மாவட்டத்தில் இயக்குவதற்காக முதற்கட்டமாக கொண்டு வரப்பட்டுள்ள 25 புதிய நகர மற்றும் புறநகர் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

புதிதாக வந்துள்ள இந்தப் பேருந்துகள் மஞ்சள் மற்றும் அடர் சிவப்பு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளின் மேல் பகுதி மஞ்சள் நிறத்திலும், கீழ்ப் பகுதி சிவப்பு நிறத்திலும் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிறங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக அரசியல் கட்சியினரும், பொதுமக்களில் சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகளுக்கு ஆளும் கட்சியின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் நிறம் பூசுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படியுங்க  "சாத்தான்குளம் வழக்கில் திடீர் கிளைமாக்ஸ்! ஜூலை 15 முதல் தினமும் பிற்பகல் 2:15 மணிக்கு நடக்கும் அதிரடி வேட்டை!"

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற வாசகத்துடன் இயக்கப்பட்ட பேருந்துகள், தவெக அரசு அமைந்த பிறகு பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, ‘மகளிர் விடியல் பயணம்’ பேருந்து திட்டத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே விவாதங்கள் எழுந்திருந்த நிலையில், தற்போது புதிய பேருந்துகளின் நிறத் தேர்வும் அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய பேருந்துகளின் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம், பார்ப்பதற்கு பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளைப் போலவே காட்சியளிப்பதாக பொதுமக்களில் சிலர் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

மேலும், பேருந்துகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள அடர் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் கண்களை உறுத்தும் வகையில் இருப்பதாகவும், அதற்கு பதிலாக குளிர்ச்சியான நிறங்களைத் தேர்வு செய்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சென்னை அப்டேட்ஸ் எக்ஸ் (X) பக்கத்திலும் இதுதொடர்பாக கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.

பேருந்துகளின் நிறம் மட்டுமின்றி, தமிழக அரசின் தற்போதைய அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளுக்கான பெயர் பேனர்களிலும் இதேபோன்ற மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதையும் படியுங்க  பெற்றோரே மறக்காதீங்க! நாளை உங்கள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து!

அரசு நிர்வாகம் மாறும் போதெல்லாம் பொதுப் போக்குவரத்து பேருந்துகளின் நிறங்களும் மாற்றப்படுவது, பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அரசியல் கட்சிகளின் அடையாளங்களைத் தவிர்த்து பொதுவான ஒரு நிறத்தை நிரந்தரமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இதனிடையே, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்படும் என சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டத்தில் இயக்குவதற்காக முதற்கட்டமாக 25 புதிய நகரப் பேருந்துகள் தற்போது சேலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அத்தம்பட்டி அருகே உள்ள ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இந்தப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பேருந்துகள் விரைவில் சேலம் மாநகரப் பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட உள்ளன. புதிய பேருந்துகள் பொதுமக்களின் பயண வசதியை மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், பேருந்துகளின் நிறத் தேர்வு தற்போது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படியுங்க  திரிஷா-வா..? அமுதா-வா..? தவெகவில் அதிகார மையம்..! அலறும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..!

இந்த நிலையில், புதிய பேருந்துகளின் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் உண்மையிலேயே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்டவையா? அல்லது இது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வழக்கமான புதிய வண்ண வடிவமைப்பா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

முதற்கட்டமாக சேலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள 25 புதிய பேருந்துகளும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில், அவற்றின் நிறம் குறித்த அரசியல் விவாதமும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 hours ago at 22 hours ago