மதுரை கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் (16). கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் விளையாட சென்ற நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த மாணவனின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததை அடுத்து திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் மற்றும் மாணவர் அமைப்புகளும் குற்றம்சாட்டி வந்தனர்.
இதனையடுத்து மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான பலமான தடயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அவரது குடும்பத்தினரும் பொதுமக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நீதி கேட்டுப் போராடிய பொதுமக்கள் மற்றும் பெண்களைக் கொடூரமான முறையில் இழுத்துச் சென்று கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மதுரையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடிய பொதுமக்கள் மற்றும் உறவினர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவத்திற்கு கனிமொழி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு.
உடற்கூறு ஆய்வில் அம்மாணவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குற்றத்தை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை, நீதி கேட்கும் மக்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
