தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (CITU) சார்பில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் அருகே நூதனப் போராட்டம் நடைபெற்றது. மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்பாமல், 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் 10,000 தொழிலாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மொத்தம் 10,000 பேரில் 5,000 திறனற்ற தொழிலாளர்களும், 5,000 திறன் பெற்ற தொழிலாளர்களும் நியமிக்கப்பட உள்ளதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே ஆயிரக்கணக்கான தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் நிலையில், அவர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் புதிய தொழிலாளர்களை ‘ஃபிக்ஸட் டெர்ம் எம்ப்ளாய்மென்ட்’ முறையில் நியமிப்பது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என CITU உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
ஃபிக்ஸட் டெர்ம் எம்ப்ளாய்மென்ட் முறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முறையான பணி பாதுகாப்பும், எதிர்கால சமூகப் பாதுகாப்பும் கிடைக்காது என்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், அரசு நிர்ணயிக்கும் தினக்கூலி 500 முதல் 700 ரூபாய் வரை இருக்கும் நிலையில், ஒப்பந்ததாரர்கள் 250 முதல் 300 ரூபாய் வரை மட்டுமே வழங்குவதாகவும், பேரிடர் காலங்களில் வழங்கப்படும் கூடுதல் படிகளும் கிடைப்பதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேர்தல் காலத்தில், 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் ஊழியர்களை அடையாளம் கண்டு, படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், தற்போது அதற்கு மாறாக ஒப்பந்த முறையை அரசு கொண்டு வருவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்சாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இயற்கைப் பேரிடர் காலங்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளதாகத் தொழிற்சங்கத்தினர் கூறினர். தானே, வர்தா, கஜா உள்ளிட்ட புயல்களின்போது இரவு, பகல் பாராமல் பணியாற்றி பொதுமக்களுக்கு மின்சாரத்தை மீண்டும் வழங்கிய தொழிலாளர்களை, அவர்களின் வாழ்வாதாரத்திலிருந்து வெளியேற்றும் வகையில் புதிய ஒப்பந்த முறையைக் கொண்டு வருவதை ஏற்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுவரும் மின்வெட்டுப் பிரச்சினையும் அரசியல் விவாதமாகியுள்ளது. மின்வெட்டுக்கு தற்போதைய அரசே காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், முந்தைய ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டு தற்போது துறையில் நீடிக்கும் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களின் செயல்பாடுகளே காரணம் என தவெக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மின்துறை அமைச்சர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், ஒப்பந்த முறை தொடர்பான அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. ஏற்கனவே இரண்டு முறை வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மின்வாரியம் கடனில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஊழியர்களுக்கு சம்பளம், தினக்கூலி மற்றும் பிற படிகள் வழங்குவதற்கே நிதி இல்லை என அரசு கூறுவது அவமானகரமானது என்றும் தொழிற்சங்கத்தினர் விமர்சித்தனர். பணியின்போது உயிரிழந்த மற்றும் உடல் உறுப்புகளை இழந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் குடும்பங்களின் நிலை குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இன்று மாலைக்குள் மின்துறை அமைச்சர் தங்களை அழைத்துப் பேச வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் தொழிற்சங்கத்தினர் எச்சரித்துள்ளனர். தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
“தீர்வு கிடைக்க வேண்டும்; தீர்வு கிடைக்காமல் போராட்டக் களத்திலிருந்து கலைந்து செல்ல மாட்டோம்” என தொழிற்சங்கத்தினர் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
