Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழகத்தின் நிதிநிலை குறித்து தமிழக வெற்றிக்கழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இதில் ஆச்சரியப்படுவதற்கு புதிய தகவல்கள் எதுவும் இல்லை என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலவிய நிதி நிர்வாகச் சீர்கேடுகளையே இது பிரதிபலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மொத்தக் கடன் 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ள நிலையில், மாநில மக்களில் ஒவ்வொருவரின் பெயரிலும் சராசரியாக ரூ.1,28,934 கடன் சுமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநிலத்தின் மொத்த வருவாயில் சுமார் 23 சதவீதம் வாங்கிய கடனுக்கான வட்டியைச் செலுத்துவதற்கே செலவிடப்படுவது கவலைக்கிடமான சூழல் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அண்ணாமலை தனது அறிக்கையில், தமிழகத்தின் சொந்த வரி வருவாய் குறைந்து வருவதையும், மின்சாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.3.18 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பத்திரப்பதிவு துறையில் நிலங்களின் மதிப்பை குறைத்து பதிவு செய்வது போன்ற முறைகேடுகளால் அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்க  ''இனி, என் கணவர் விஜய் கூடத்தான் இருப்பேன்..! சமாதானமான சங்கீதா..! வெளியாகும் அந்த வீடியோ..!

தமிழகத்தின் நிதிநிலையை சீரமைப்பதற்கு தற்போது மிகக் குறுகிய காலமே இருப்பதாகவும், 2031ஆம் ஆண்டுக்குப் பிறகு வேலை செய்யும் வயதுடைய மக்கள்தொகை குறையத் தொடங்கும் என்பதால், அதற்கு முன்பே மாநிலத்தின் பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முக்கியமாக, தற்போதைய தமிழக வெற்றிக்கழக அரசு இந்த வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி செயல்படாமல் இருந்துவிடக்கூடாது என்றும், அரசு திட்டங்கள் முடங்குவதற்கோ அல்லது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கோ இந்த அறிக்கையை ஒரு சாக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிதி நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்க, அரசியல்வாதிகளை மட்டுமே நம்பாமல், பொருளாதார நிபுணர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த அறிஞர்களை உள்ளடக்கிய திறன்மிக்க ஆலோசனைக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என அவர் முதல்வர் விஜய்க்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தமிழகத்தை தற்போதைய நிதிப் பள்ளத்தில் இருந்து மீட்டு, வலுவான பொருளாதாரப் பாதைக்கு கொண்டு செல்ல அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்க  அதிமுகவுக்கு விழுந்த மரண அடி..! 4 முன்னாள் அமைச்சர்கள், 7 Ex எம்.எல்.ஏக்கள் அவுட்: ஒட்டுமொத்தமாக அள்ளிய விஜய்..!

முந்தைய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது ஒரு தொடக்கமாக இருக்கலாம்; ஆனால் அதுவே தீர்வாகாது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொறுப்பான எதிர்க்கட்சியாக, தமிழகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தேவையான ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிக்கை, தமிழக வெற்றிக்கழக அரசின் அடுத்தகட்ட பொருளாதார நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago