தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளின் செல்பேசி இணைப்புகள் மற்றும் நெட்வொர்க் சேவைகள் மாற்றப்பட்டுள்ளதால், மின் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளைத் தொடர்புகொள்வதில் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக அதிகாரிகள் பயன்படுத்தி வந்த பி.எஸ்.என்.எல். இணைப்புகள் தற்போது வேறு நெட்வொர்க் நிறுவனங்களின் சேவைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சில இடங்களில் அதே செல்பேசி எண் தொடர்ந்தாலும் நெட்வொர்க் மட்டும் மாற்றப்பட்டுள்ளதாகவும், சில பகுதிகளில் நெட்வொர்க்குடன் சேர்த்து செல்பேசி எண்ணும் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பழைய எண்களுக்கு அழைக்கும் போது ‘சேவையில் இல்லை’ அல்லது ‘சுவிட்ச் ஆஃப்’ என தகவல் வருவதாகவும், அதிகாரிகளைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்க முடியாமல் நுகர்வோர் சிரமப்படுவதாகவும் கூறப்படுகிறது.
திருச்சி, புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருப்பூர், காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சில இடங்களில் நெட்வொர்க் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், பொதுமக்களுக்கு புதிய தொடர்பு விவரங்கள் முறையாக தெரிவிக்கப்படாததால், எந்த எண்ணில் அதிகாரிகளைத் தொடர்புகொள்வது என்பது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் சென்னை வடக்கு, சென்னை தெற்கு, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், ஈரோடு மற்றும் வேலூர் என ஒன்பது முக்கிய மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் கீழ் பல வட்டங்கள், உள்வட்டங்கள் மற்றும் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பல பகுதிகளில் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், மின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு பெறுவது பொதுமக்களுக்கு சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.
அடிக்கடி மின்தடை ஏற்படுவது, அதிக மின் கட்டணம் வருவது, மின் மீட்டர் வேகமாக ஓடுவது அல்லது செயல்படாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளுக்காக மக்கள் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள வேண்டியுள்ளது. ஆனால் தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்க முடியாத சூழலில், ஒவ்வொரு முறையும் விடுமுறை எடுத்துக்கொண்டு மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாக நுகர்வோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
அலுவலகங்களுக்கு நேரில் சென்றாலும் அதிகாரிகள் களப்பணியில் இருப்பதாகவும், சில நேரங்களில் மின் மீட்டர்கள் கையிருப்பில் இல்லை என்றும் கூறப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் ஒரு சிறிய மின் பிரச்சினையைக் கூட தீர்க்க பலமுறை அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு நேரம், பணம் மற்றும் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சில பகுதிகளில் மின் இணைப்பு வழங்குவது, மின் மீட்டர் பொருத்துவது அல்லது பழுதுகளை சரிசெய்வது போன்ற பணிகளுக்கு லஞ்சம் கேட்கப்படுவதாக நுகர்வோர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. லஞ்சம் வழங்கினால் பணிகள் விரைவாக முடிக்கப்படுவதாகவும், வழங்காவிட்டால் பல்வேறு காரணங்களைக் கூறி பணிகள் தாமதப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை வடக்கு மண்டலத்தின் சில அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் அதிகமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மின்வாரியத்தில் ஏற்கனவே ஊழல் தொடர்பான பல்வேறு புகார்கள் மற்றும் விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாகவும், சட்டப்பேரவையிலும் இதுகுறித்து விவாதங்கள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், சேவை குறைபாடுகளுடன் லஞ்சப் புகார்களும் தொடர்வது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சப் புகார்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும், சில இடங்களில் விஜிலென்ஸ் அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்தும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மின்வாரிய அதிகாரிகளின் செல்பேசி எண்கள் மாற்றப்பட்டிருந்தால், புதிய எண்களை பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் நுகர்வோர் வலியுறுத்துகின்றனர். மின் கட்டணத்தை ஒரு நாள் தாமதமாகச் செலுத்தினால்கூட இணைப்பைத் துண்டிக்கும் மின்வாரியம், அதேபோல் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் சேவை வழங்காத அதிகாரிகள் மீதும் பொறுப்பை உறுதி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மின்வாரிய சேவைகளை உடனடியாக சீரமைத்து, அதிகாரிகளை எளிதில் தொடர்புகொள்ளும் வசதியை ஏற்படுத்துவதுடன், லஞ்சப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மின் நுகர்வோருக்கு தடையற்ற மற்றும் வெளிப்படையான சேவையை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த விவகாரத்தில் மின்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
