https://republictn.com/

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. வியாழக்கிழமை பகல், தனது இரண்டு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் நம்பிக்குளம் பகுதியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, காரில் நீண்ட தூரமாக பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், திடீரென காளிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் மீது காரை மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த காளிமுத்துவின் ஐந்து வயது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இதையடுத்து, உயிர் தப்பிக்க ஓட முயன்ற காளிமுத்துவை, காரிலிருந்து இறங்கிய கும்பல் சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அதுமட்டுமல்லாமல், கொலைவெறியுடன் அவரது தலையை துண்டித்து, சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள கரம்பை மாநில நெடுஞ்சாலையின் நடுவில் வீசி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் காளிமுத்துவின் மற்றொரு மகனான 15 வயது சின்னதுரை படுகாயமடைந்து, அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உயர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு, குற்றவாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகளை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார்.

கணவரையும், ஐந்து வயது மகனையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்த காளிமுத்துவின் மனைவி, குழந்தையின் உடலை மடியில் வைத்து கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. பின்னர், போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த இரட்டைக் கொலை சம்பவத்தின் பின்னணியில் சுமார் பத்து ஆண்டுகளாக நீடித்து வரும் பழிக்குப் பழி பகை இருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கடந்த 2007ஆம் ஆண்டு சுப்பிரமணியன் என்பவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்குப் பழிக்குப் பழியாக, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் பெருமாள் மற்றும் பாப்பநாசம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

அந்தச் சம்பவங்களுக்கு பழிவாங்கும் நோக்கிலேயே தற்போது காளிமுத்து மற்றும் அவரது மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்தக் கொலைச் சம்பவத்தில், கடந்த காலத்தில் உயிரிழந்த பெருமாளின் மகன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் தொடர்புடையிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அதோடு, காளிமுத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மூலச்சி கிராமத்திற்குள் எடுத்துச் சென்று சிலரிடம் காட்டி மிரட்டியதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவர்களிடம் நடைபெறும் விசாரணைக்குப் பிறகே இந்த இரட்டைக் கொலையின் முழு பின்னணியும் வெளிச்சத்திற்கு வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மூலச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago