தமிழ்நாடு அரசு நிர்வாக வட்டாரங்களிலும், தலைமைச் செயலகப் பகுதிகளிலும் தற்போது ஒரு புதிய சுற்றறிக்கை பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள இந்த உத்தரவு, அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பல முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
சுற்றறிக்கையின் முக்கியச் சாராம்சம்
அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான கட்டுப்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளது. மத்திய அல்லது மாநில அரசுகளின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ அல்லது முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலோ விமர்சித்து எழுதவோ பேசவோ கூடாது. மீம்ஸ்கள் மூலமாகக் கூடக் குறை கூறக் கூடாது.
பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு கருத்தையும் வெளியிடக் கூடாது. அரசை விமர்சித்துத் தீர்மானம் நிறைவேற்றும் அலுவல் சாராத அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது.
இக்கட்டுப்பாடுகளை மீறினால், 1973-ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மெமோ, விசாரணை மற்றும் பணியிடை நீக்கம் வரை கடுமையான நடவடிக்கைகள் பாயும்.
1973-ஆம் ஆண்டின் விதிகள்
இக்கட்டுப்பாடு முற்றிலும் புதியது அல்ல. இதற்கான சட்டப்பூர்வ அடித்தளம் 1970-களிலேயே உருவாக்கப்பட்டது. 1970-களின் தொடக்கத்தில் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் கிடையாது. செய்தித்தாள்களும் ‘ஆல் இந்தியா ரேடியோ’ மற்றும் ‘தூர்தர்ஷன்’ மட்டுமே பிரதான ஊடகங்களாக இருந்தன.
அரசு ஊழியர் சங்கங்கள் வலுவடைந்து ஸ்ட்ரைக் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டபோது, ரகசியத் தகவல்கள் கசிவதைத் தடுக்கவும், அரசியல் கட்சிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராகச் செயல்படுவதைக் கட்டுப்படுத்தவும் 1973 ஏப்ரல் 19 அன்று இந்த நடத்தை விதிகள் கொண்டுவரப்பட்டன.
விதி 11 & 12: இதில் விதி 11 ஊடகம் மற்றும் ரேடியோ தொடர்பையும், விதி 12 அரசை விமர்சிப்பதையும் தடை செய்கிறது. அரசு ஊழியர் நடுநிலையோடு இருக்க வேண்டும் என்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
மத்திய மற்றும் பிற மாநில அரசுகளின் நடைமுறை
தமிழ்நாடு அரசு மட்டுமல்லாமல், மத்திய அரசும் பிற மாநிலங்களும் இதுபோன்ற உத்தரவுகளை ஏற்கெனவே பிறப்பித்துள்ளன. 1964-ஆம் ஆண்டின் மத்திய சிவில் பணிகள் நடத்தை விதிகளின் அடிப்படையில், 2014, 2016 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் சிறப்பு விளக்குச் சுற்றறிக்கைகளை வெளியிட்டது. பழைய சட்டங்கள் தற்போதைய சமூக வலைதளங்களுக்கும் பொருந்தும் என தெளிவுபடுத்தியது.
ஹரியானா, பீகார், ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களும் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துக்களைப் பகிர்வதற்குக் கட்டுப்பாடு விதித்துள்ளன.

அரசியல் முரண்பாடுகள்
இவ்விவகாரத்தில் அரசியல் கட்சிகள் குரல் எழுப்பினாலும், வரலாற்று ரீதியாக இரு பெரும் திராவிடக் கட்சிகளுமே இதில் தொடர்பு உள்ளன.
இச்சட்ட நடைமுறையை முதன்முதலில் 1973-ல் கொண்டு வந்தது திமுக அரசு. 2019-ல் சமூக வலைதளங்களைக் குறிப்பிட்டு இக்கட்டுப்பாட்டை விரிவுபடுத்திச் சுற்றறிக்கை வெளியிட்டது அதிமுக அரசு.
இச்சுற்றறிக்கை குறித்து அரசு ஊழியர்களும் சமூக ஆர்வலர்களும் பல கேள்விகளை முன்வைக்கின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19(1)(a) வழங்கும் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை, அரசு வேலைக்கு வந்தவுடன் முழுமையாகப் பறிக்கப்படுகிறதா? குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கும், வேண்டுமென்றே அரசை விமர்சிப்பதற்கும் இடையிலான வித்தியாசத்தை இச்சுற்றறிக்கை ஏன் வரையறுக்கவில்லை?
மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு, பணிச்சுமை போன்ற நடைமுறைச் சிக்கல்களைக் களத்தில் பணிபுரியும் ஊழியர்களை விட வேறு யாரால் துல்லியமாகக் கூற முடியும்? துறை ரீதியான புகார்களுக்குத் தீர்வு கிடைக்காதபோது சமூக வலைதளமே தற்காப்புக் குரலாக மாறுகிறது.
பணிநேரம் தாண்டி, ஒரு சராசரி குடிமகனாகத் தனது சொந்தப் பக்கத்தில் கருத்துத் தெரிவிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
நிர்வாக ஒழுங்கைக் காப்பாற்ற அரசு எடுக்கும் முயற்சிகளில் நியாயம் இருந்தாலும், நியாயமான சுட்டிக்காட்டல்களைக் கூட ஒடுக்குவது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல. 1973-ஆம் ஆண்டின் விதியை 2026-ன் அதிநவீன டிஜிட்டல் காலத்திற்கு அப்படியே பொருத்துவது யோசிக்கப்பட வேண்டிய ஒன்று.
ஊழியர்களின் நியாயமான உணர்வுகளுக்கும் பேச்சுரிமைக்கும் மதிப்பளித்து, அவசியமான வழிகாட்டுதல்களைத் தெளிவுபடுத்துவதே ஒரு சிறந்த அரசாங்கத்திற்கு லட்சணமாகும்.
