இன்றைய டிஜிட்டல் உலகில் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகள் நமது அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டன. அதே சமயம், இவற்றைப் பயன்படுத்தி நடைபெறும் சைபர் குற்றங்களும் ஆன்லைன் நிதி மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT) ‘சிம் பைண்டிங்’ (SIM Binding) என்ற புதிய பாதுகாப்பு விதியை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த விதி என்றால் என்ன, இது எவ்வாறு செயல்படுகிறது, இதனால் பயனர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பது பற்றி விரிவாக சொல்கிறோம்.
சிம் பைண்டிங் விதி என்றால் என்ன?
பொதுவாக, வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் கணக்கை உருவாக்க நமது மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐப் பயன்படுத்தினால் போதுமானது. கணக்கு தொடங்கிய பிறகு, அந்த சிம் கார்டை போனில் இருந்து எடுத்துவிட்டாலோ அல்லது அது செயலிழந்துபோனாலோ கூட வைஃபை (Wi-Fi) உதவியுடன் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

ஆனால், சிம் பைண்டிங் விதியின்படி, எந்த மொபைல் எண்ணில் கணக்கு இயங்குகிறதோ, அந்த எண்ணுக்கான ‘செயலில் உள்ள’ (Active) சிம் கார்டு கண்டிப்பாக அதே போனில் இருக்க வேண்டும். சிம் கார்டு போனில் இல்லை என்றாலோ அல்லது அதன் சேவைகள் முடக்கப்பட்டிருந்தாலோ அந்த மெசேஜிங் செயலியைப் பயன்படுத்த முடியாது.
அரசாங்கம் இந்த விதியை கொண்டு வர காரணம் என்ன?
சைபர் குற்றவாளிகள் மற்றும் மோசடி செய்பவர்கள் இந்திய எண்களைப் பயன்படுத்தி ஒருமுறை OTP மூலம் வாட்ஸ்அப் கணக்குகளைத் தொடங்குகின்றனர். பின்னர், அந்த சிம் கார்டுகளை அகற்றிவிட்டு வெளிநாடுகளில் இருந்தோ அல்லது வேறு இடங்களில் இருந்தோ இயங்கி மக்களை ஏமாற்றுகின்றனர்.
போலி அரசு அதிகாரிகளாக நடித்து மிரட்டுவது (Digital Arrest), பகுதி நேர வேலை மற்றும் அதிக லாபம் தரும் முதலீடு என ஆசை வார்த்தை கூறி பணத்தை ஏமாற்றுவது போன்ற பல குற்றங்களுக்கு இந்த முறையே பயன்படுத்தப்படுகிறது. சிம் பைண்டிங் அமலுக்கு வரும்போது, செயலில் உள்ள சிம் கார்டு இல்லாமல் கணக்குகளை இயக்க முடியாது என்பதால், போலி கணக்குகளை எளிதில் கண்டறிந்து சைபர் குற்றங்களைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
இது எப்போது அமலுக்கு வருகிறது?
இந்த வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்குச் செயலி நிறுவனங்களுக்கு 2026 டிசம்பர் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிம் பைண்டிங் விதி 2027 ஜனவரி 1 முதல் முழுமையாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் வெப் பயனார்களுக்குப் பாதிப்பா?
கணினி அல்லது லேப்டாப்பில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துபவர்களுக்கும் இதில் சில பாதுகாப்பு மாற்றங்கள் வரக்கூடும்.
ஆரம்பகட்ட வழிகாட்டுதல்களின்படி, கணினியில் உள்நுழைந்திருக்கும் வாட்ஸ்அப் வெப் கணக்குகள் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை தானாகவே ‘லாக் அவுட்’ (Log out) ஆகும். பயனர்கள் மீண்டும் போனில் QR கோடை ஸ்கேன் செய்து மட்டுமே இணைக்க முடியும்.

இருப்பினும், அபாயத்தின் அடிப்படையில் (Risk-based approach) இந்த லாக் அவுட் நடைமுறையைச் செயல்படுத்தலாம் என்றும், குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் தேவையில்லை என்றும் நாடாளுமன்றப் பதிலில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இரட்டை சிம் பயன்படுத்துபவர்கள்
உங்கள் போனில் இரண்டு சிம்கள் இருந்தால், நீங்கள் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் பயன்படுத்தும் எண்ணின் சிம் கார்டு போனில் செயலில் (Active) உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் புதிய போன் வாங்கினாலோ அல்லது புதிய சிம் கார்டிற்கு மாறினாலோ, செயலி உங்களை மீண்டும் ஒருமுறை OTP மூலம் சரிபார்க்கக் கோரும்.
நீங்கள் வெளிநாடு செல்லும்போது இந்திய சிம் கார்டு உங்கள் போனில் இருந்து, சர்வதேச ரோமிங்கில் இருந்தால் இந்த விதியால் எந்தப் பாதிப்பும் வராது. கணக்கு தடையின்றி இயங்கும்.
சிம் பைண்டிங் நடைமுறை ஆன்லைன் மோசடிகளை பெருமளவில் கட்டுப்படுத்த உதவும் ஒரு நல்ல முயற்சியாகும். இருப்பினும், பயனர்கள் முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்குரிய லிங்க் (Links), OTP போன்றவற்றைப் பகிராமல் விழிப்புடன் இருப்பது எப்போதும் அவசியம்.
