Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாகப் புகைந்து கொண்டிருந்த மக்கள் புரட்சி, இப்போது பாகிஸ்தான் அரசுக்கு எதிரான நேரடிச் சுதந்திரப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. “நாங்கள் பாகிஸ்தானின் ஒரு பகுதி அல்ல” என்று போராட்டக்காரர்கள் பகிரங்கமாக அறிவித்திருப்பதுடன், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ‘மாற்று வழிகளை’ நாடப்போவதாகவும் எச்சரித்துள்ளனர். இந்த அதிரடித் திருப்பம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் ரவாலகோட் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் செவ்வாய்க்கிழமையன்று லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பிரம்மாண்டப் போராட்டம் நடைபெற்றது. அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசிய ஜம்மு காஷ்மீர் அவாமி செயல் குழுவின் முக்கியத் தலைவர் சர்தார் அமன் கான், பாகிஸ்தான் அரசை நோக்கி அதிரடி எச்சரிக்கை விடுத்தார்.

“எங்களுக்கு உங்கள் ரேஷன் பொருட்கள் தேவையில்லை. நீங்கள்தான் எங்களைச் சார்ந்திருக்கிறீர்கள். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வருவதை நீங்கள் தொடர்ந்து தடுத்தால், எங்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள மக்கள் ‘மாற்று வழிகளை’ ஆராய வேண்டிய கட்டாயம் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

உணவு, ரேஷன் பொருட்கள் மற்றும் அடிப்படைத் தேவைகளை பாகிஸ்தான் நிர்வாகம் திட்டமிட்டு முடக்கி வருவதற்கு எதிராக, காஷ்மீர் மக்கள் மத்தியில் மிக நீண்டகாலமாக நிலவி வந்த கோபத்தின் உச்சகட்டமாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

மக்களின் அமைதியான பொருளாதாரப் போராட்டத்தை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவமும், காவல்துறையும் கொடூரமான வன்முறையைக் கையில் எடுத்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களாகப் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடக்கும் மோதலில் இதுவரை குறைந்தது 22 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அரசு ஆயுதமற்ற பொதுமக்கள் மீது கொடிய வன்முறையைப் பயன்படுத்துவதாகவும், இணையச் சேவைகளை முழுமையாக முடக்கி உலகிற்குத் தகவல் தெரியாமல் மறைப்பதாகவும், ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் ‘கூட்டுத் தண்டனைக்கு’ உள்ளாக்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. ஜூன் மாதத் தொடக்கத்தில் இருந்தே இங்கு இணையம் துண்டிக்கப்பட்டுள்ளதால், அன்றாட வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் ‘ஜம்மு காஷ்மீர் அவாமி செயல் குழு’ என்ற அமைப்புக்குப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு இந்த மாதத் தொடக்கத்தில் தடை விதித்தது. விலைவாசி குறைப்பு, உணவு விநியோகம் போன்ற நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் சர்தார் அமன் கான் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களை ‘பயங்கரவாதிகள்’ எனச் சித்தரித்துக் கைது செய்யவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது என உள்ளூர் மக்கள் கொந்தளிக்கின்றனர்.

இதற்கிடையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப், “ரவாலகோட் மற்றும் மிர்பூர் பகுதி மக்கள் உண்மையான காஷ்மீரிகள் அல்ல” என்று அண்மையில் பேசிய பேச்சு, எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியுள்ளது. இந்த இனவெறிப் பேச்சு, இஸ்லாமாபாத் ஆட்சிக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்குமான விரிசலை நிரந்தரமாக்கியுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை முடக்கி, தங்களைப் பட்டிணி போட்டுப் பணிய வைக்க நினைக்கும் பாகிஸ்தானுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ள “மாற்று வழி” என்ற வார்த்தைதான் இப்போது பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.

பூகோள ரீதியாகப் பாகிஸ்தான் எல்லையை மூடினால், அவர்களுக்கு இருக்கும் ஒரே மாற்று வழி இந்திய எல்லை மற்றும் இந்தியக் காஷ்மீரின் உதவிதான். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலும் அடக்குமுறையிலும் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு மக்கள், தங்களை இந்தியாவின் எல்லையோடு இணைத்துக் கொள்ளும் மறைமுக சமிக்ஞையாகவே இது பார்க்கப்படுகிறது.

விலைவாசி உயர்வுக்கான போராட்டமாகத் தொடங்கி, தற்போது “பாகிஸ்தானே வெளியேறு” என்ற அரசியல் முழக்கமாக மாறியுள்ள இந்த விவகாரம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வரைபடத்தையே மாற்றியமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago