இந்த புதிய திட்டத்தின்படி, பாரம்பரியமாக வழங்கப்பட்டு வந்த 100 நாள் வேலைவாய்ப்பு, இனி 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, கிராமப்புற மக்களுக்கு ஒரு நிதியாண்டில் வழங்கப்பட்டு வந்த வேலை நாட்கள் 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் இனி “விபி கிராம்ஜி திட்டம்” (VB-G RAM) என்ற பெயரில் செயல்படுத்தப்படும். இதற்கு முன்பு, இத்திட்டத்திற்கான முழு நிதியையும் மத்திய அரசே வழங்கி வந்த நிலையில், தற்போது நிதிப் பகிர்வில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த புதிய திட்டத்தின் மூலம் கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, கூடுதல் வேலைவாய்ப்புகளும் உறுதி செய்யப்படவுள்ளன.
கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்கும் விபி கிராம்ஜி திட்டம், தமிழகத்தில் இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதற்காக செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து, “வளர்ச்சி அடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம்” என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தத் திட்டத்திற்காக நாடு முழுவதும் ரூ.95,692 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு ரூ.7,957 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுத்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, விவசாயப் பருவ காலங்களில் 60 நாட்கள் வேலை நிறுத்தம் அமல்படுத்தப்படும்.
மேலும், தொழிலாளர்கள் பணியாற்றிய ஊதியம் ஒரு வாரத்திற்குள் அல்லது அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். கட்டாயமாக மின்னணு வருகைப் பதிவேடு (e-Attendance) பராமரிக்கப்படும். தொழிலாளர்களுக்கான அனைத்து ஊதியமும் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டும்.
மேலும், ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டால், அதற்கான வட்டியுடன் சேர்த்து ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
