Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பிசிஆர் சட்டத்தின் பயன்பாட்டில் நியாயமும், சமநிலையும் உறுதி செய்யப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெடிச்சிபாளையம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில், 85 வயதான முதியவர் கிருஷ்ணன் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதற்குப் பதிலாக அவர் மீதும் ஊர் பொதுமக்கள் மீதும் பிசிஆர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சமூக நீதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட முக்கியமான சட்டமாகும். ஆனால், சட்டத்தின் நோக்கத்திற்கு மாறாக முழுமையான விசாரணை மேற்கொள்ளாமல் ஒருதலைப்பட்சமாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில், பின்னர் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாமல் விடுதலையாகும் வழக்குகள் கூட ஆரம்ப கட்டத்திலேயே சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கின்றன. குறிப்பாக இளைஞர்கள் அரசு வேலைகள், தனியார் வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக முன்னேற்ற வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இறுதியில் அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டாலும், அதுவரை அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது.

இதையும் படியுங்க  “இடைத்தேர்தலில் CM Vijay-க்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள்” – அன்புமணி எச்சரிக்கை

எனவே, பிசிஆர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாக உரிய அதிகாரி மூலம் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை மற்றும் முகாந்திரம் உறுதி செய்யப்பட்ட பின்னரே வழக்குப் பதிவு செய்யும் நடைமுறையை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைத்து சமூக மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.

சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில் நிரபராதிகள் பாதிக்கப்படாத வகையில் சட்டத்தின் பயன்பாடு உறுதி செய்யப்பட வேண்டும். சமூக நீதியையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் வகையில் பிசிஆர் சட்டத்தின் அமலாக்கத்தில் வெளிப்படைத்தன்மை, நியாயம் மற்றும் சமநிலை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத்தெரிவித்துள்ளார்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago